தேசிய செய்திகள்

அயோத்தி நிலம் தொடர்பான வழக்கு விசாரணை: சர்ச்சை கருத்து தெரிவித்த பா.ஜனதா தலைவருக்கு - சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் + "||" + Ayodhya land investigation Commenting on the controversy For the leader of the BJP Supreme Court condemnation

அயோத்தி நிலம் தொடர்பான வழக்கு விசாரணை: சர்ச்சை கருத்து தெரிவித்த பா.ஜனதா தலைவருக்கு - சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்

அயோத்தி நிலம் தொடர்பான வழக்கு விசாரணை: சர்ச்சை கருத்து தெரிவித்த பா.ஜனதா தலைவருக்கு - சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்
அயோத்தி நிலம் தொடர்பான பிரச்சினையில், சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த பாரதீய ஜனதா தலைவருக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி,

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்தை ராம்லல்லா, நிர்மோகி அகாரா, சன்னி வக்பு வாரியம் ஆகியவை சமமாக பிரித்துக் கொள்ளுமாறு அலகாபாத் ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தினந்தோறும் விசாரித்து வருகிறது. சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வில் நேற்று இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது.


நேற்று விசாரணை தொடங்கியதும் சன்னி வக்பு வாரியத்தின் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ராஜீவ் தவான், தான் இந்த வழக்கில் முஸ்லிம் அமைப்பு தரப்பில் ஆஜர் ஆவதால் தனக்கு பேஸ்புக் மூலம் கடந்த வாரம் மிரட்டல் வந்ததாகவும், புதன்கிழமை தனது குமாஸ்தாவுக்கு பிற வக்கீல்களின் குமாஸ்தாக்கள் மிரட்டல் விடுத்ததாகவும் கூறினார். தான் இந்து நம்பிக்கைக்கு எதிராக என்றும் வாதிட்டது இல்லை என்று கூறினார்.

பாரதீய ஜனதா தலைவர் (உத்தரபிரதேச மந்திரி முகுத் பிகாரி வர்மா) ஒருவர், சுப்ரீம் கோர்ட்டு தங்களுடையதுதான் என்றும் அயோத்தி வழக்கில் தங்களுக்கு சாதகமாகத்தான் தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறியதையும் ராஜீவ் தவான் சுட்டிக் காட்டினார்.

உடனே தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், அந்த தலைவர் அவ்வாறு கூறியதை ஊக்குவிக்கமுடியாது என்றும், அவரது கருத்தை கண்டிப்பதாகவும் கூறினார். அத்துடன், “உங்களுக்கு (ராஜீவ் தவான்) போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்றால் ஏற்பாடு செய்யப்படும்” என்று கூறினார்.

அதற்கு ராஜீவ் தவான், “உங்களின் உத்தரவாதம் ஒன்றே எனக்கு போதும். பாதுகாப்பு தேவை இல்லை” என்று கூறினார்.

தொடர்ந்து அவர் வாதாடுகையில் கூறியதாவது:-

எதிர்தரப்பினர் ஏற்கனவே செய்த தவறை தொடர்ந்து செய்து வருவதற்கான தேவை எதுவும் கிடையாது. எவ்வித ஆதாரமும் இல்லாமல் தங்களுக்கு அந்த இடத்தில் உரிமை உள்ளதாகவும் அந்த இடம் தங்களுக்கு சொந்தமானது என்றும் கூறிவருகிறார்கள்.

சட்டவிரோதமான ஒரு நடைமுறையை உருவாக்கி, அந்த சட்டவிரோதமான நடைமுறையின் அடிப்படையில் லாபம் அடைய வேண்டும் என்று முயற்சிக்க முடியாது. அந்த சட்டவிரோதமான நடைமுறை அப்படியே காலத்துக்கும் தொடரக்கூடாது.

அந்த இடத்தில் உள்ள சட்டவிரோதமான நடைமுறையால், நாங்கள் அந்த இடத்தில் வழிபாடு நடத்தவில்லை என்பதற்காக அந்த இடத்தில் எங்களுக்கு உரிமை இல்லை என்று மறுக்க முடியாது.

அங்கு வெள்ளிக்கிழமைகளில் தொழுகை நடைபெற்று வந்தது. இப்போது அதனை அவர்கள் மறுக்க முயற்சிக்கிறார்கள்.

பூஜை செய்வதற்கான தர்மகர்த்தா உரிமை அவர்களுக்கு 1858-ல் தொடங்கி 1959-ம் ஆண்டில் முடிவடைந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

வழக்கு விசாரணை இன்றும் (வெள்ளிக்கிழமை) தொடர்ந்து நடைபெறுகிறது.