தேசிய செய்திகள்

ஐ.நா.வில் காஷ்மீர் விவகாரத்தை: அரசியலாக்க நினைத்த பாகிஸ்தான் முயற்சி முறியடிப்பு + "||" + At the UN The issue of Kashmir Political thought Pakistan attempt is thwarted

ஐ.நா.வில் காஷ்மீர் விவகாரத்தை: அரசியலாக்க நினைத்த பாகிஸ்தான் முயற்சி முறியடிப்பு

ஐ.நா.வில் காஷ்மீர் விவகாரத்தை: அரசியலாக்க நினைத்த  பாகிஸ்தான் முயற்சி முறியடிப்பு
ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை அரசியலாக்கும் பாகிஸ்தானின் முயற்சி முறியடிக்கப்பட்டது என்று இந்தியா கூறியுள்ளது.
புதுடெல்லி,

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் எழுப்பியது.

அங்கு மனித உரிமை மீறல்கள் நடப்பதாகவும், அதுகுறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்றும் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மெக்மூத் குரேஷி பேசினார். ஆனால் அதற்கு இந்தியா பதிலடி கொடுத்தது. இந்தியாவின் இறையாண்மை முடிவை பாகிஸ்தான் கேள்வி கேட்க முடியாது என்று தெரிவித்து விட்டது.


இந்நிலையில், இந்த மோதலை சுட்டிக்காட்டி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை அரசியலாக்க முயன்ற பாகிஸ்தானின் முயற்சி முறியடிக்கப்பட்டது. ஒரு பொய்யை 4 அல்லது 5 தடவை சொன்னால் அது உண்மை ஆகிவிடாது என்பதை பாகிஸ்தான் உணர்ந்து கொள்ள வேண்டும்.

தங்கள் நாட்டில் உள்ள பயங்கரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தான் ஆக்கமும், ஊக்கமும் அளிப்பதை உலகம் அறியும். பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளித்து, பயங்கரவாதத்தின் மையப்புள்ளியாக திகழும் பாகிஸ்தான், மனித உரிமை விஷயத்தில் உலக மக்களின் சார்பாக பேசுவது போன்று நடித்து வருவது வேடிக்கையாக இருக்கிறது. இந்த அமைதி தூதரின் நம்பகத்தன்மை, பெரிதும் சந்தேகத்திற்கிடமானது.

தங்கள் நாட்டில் உள்ள மதரீதியான, இனரீதியான சிறுபான்மையினரை பாகிஸ்தான் துன்புறுத்தி வருவது அனைவரும் அறிந்ததுதான். அதை நான் விவரிக்க வேண்டியது இல்லை. அதை உலகம் அறியும். இவ்வாறு அவர் கூறினார்.