சிகரெட் பட்ஸ் உள்பட 12 வகையான பொருட்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு பரிசீலனை


சிகரெட் பட்ஸ் உள்பட 12 வகையான பொருட்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு பரிசீலனை
x
தினத்தந்தி 14 Sept 2019 8:14 AM IST (Updated: 14 Sept 2019 8:14 AM IST)
t-max-icont-min-icon

சிகரெட் பட்ஸ் உள்பட 12 வகையான பொருட்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

புதுடெல்லி, 

ஒரு முறை மட்டுமே உபயோகப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க மோடி தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.  சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்த பிரதமர் மோடி, அக்டோபர் 2-ம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிக்கும் நடவடிக்கையில் அனைவரும் ஈடுபட வேண்டும். மகாத்மா காந்தி பிறந்த தினமான அன்று முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை முழுமையாக நாம் தடை செய்வோம். 

வீடு, அலுவலகம், பணிபுரியும் இடம் என அனைத்துப் பகுதிகளிலும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு விடை கொடுப்போம். சுய உதவிக்குழு, சமூக அமைப்புகள், தனிநபர் என பல்வேறு தரப்பினரும் இந்த இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு முழுமையாக விடை கொடுப்போம்” என்று பேசியிருந்தார்.

இந்த நிலையில், ஒரு முறை மட்டுமே பயன்படும் 12 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. குடிநீர் தவிர்த்து பிற பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் சிறிய பிளாஸ்டிக் பாட்டில்கள், அலங்கார பொருட்கள் மற்றும் சிகரெட் பட்ஸ்களில் பயன்படுத்தப்படும் தெர்மோகோல் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. 

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு முற்றிலும் தடை விதிக்க மத்திய அரசு ஆர்வம் காட்டி வருவதாகவும், எனினும் இதை அமல்படுத்துவதற்கான  காலக்கெடு எதுவும் நிர்ணையிக்கப்படவில்லை என மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் கூறியுள்ளார். பல்வேறு கட்டங்களாக தடை அமல்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

தடை செய்யப்பட வேண்டிய 12 வகையான பிளாஸ்டிக் பொருட்களை மத்திய அரசு தொகுத்துள்ளது. மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியத்திடம் இவை சமர்பிக்கப்படும்.  கடினமான பிளாஸ்டிக் கேரி பேக்ஸ், ஸ்டிராஸ், பிளாஸ்டிக் கரண்டிகள், பவுல்கள், பிளாஸ்டிக் கொடிகள், சிகரெட் பட்ஸ்கள், பேனர்கள்  உள்ளிட்டவை தடை செய்ய தீர்மானிக்கப்பட்ட பட்டியலில் இடம் பிடித்துள்ளன.

சுற்றுச் சூழலுக்கு கேடாக விளங்கும் பிளாஸ்டிக் பொருட்களை வரும் 2022 ஆம் ஆண்டுக்குள் முற்றிலும் தடை செய்வதற்கான செயல் திட்டங்களை மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தயாரித்து வருகிறது.


Next Story