தேசிய செய்திகள்

இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் - அமித்‌ஷா கருத்து + "||" + On Hindi Diwas, Amit Shah Bats for 'One Nation, One Language', Appeals People to Fulfil Gandhi's Dream

இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் - அமித்‌ஷா கருத்து

இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் - அமித்‌ஷா கருத்து
சர்வதேச அளவில் நாட்டை அடையாளப்படுத்த இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என உள்துறை மந்திரி அமித்‌ஷா கூறியுள்ளார்.
புதுடெல்லி,

இந்திய அரசியல் நிர்ணய சபையானது கடந்த 1949-ம் ஆண்டு செப்டம்பர் 14-ந்தேதி, இந்திக்கு அலுவல் மொழி அந்தஸ்தை வழங்கியது. இதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 14-ந்தேதி இந்தி தினமாக கொண்டாடப்படுகிறது.


அந்தவகையில் இந்த ஆண்டுக்கான இந்தி தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாட்டு மக்களுக்கு உள்துறை மந்திரி அமித்‌ஷா ‘டுவிட்டர்’ மூலம் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

அதில் அவர் கூறுகையில், ‘இந்தியாவில் பல மொழிகள் பேசப்படுகின்றன. ஒவ்வொரு மொழிக்கும் தனிப்பட்ட முக்கியத்துவம் இருக்கிறது. ஆனால் ஒட்டுமொத்த நாட்டுக்கும் பொதுவாக ஒரு மொழி நிச்சயம் தேவை. அதுதான் சர்வதேச அளவில் இந்தியாவின் அடையாளமாக இருக்கும். அப்படி இந்தியாவை எந்த மொழியால் இணைக்க முடியுமென்றால், அது இந்திதான். அதைத்தான் ஏராளமானோர் பேசுகிறார்கள்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

மக்கள் தங்கள் தாய்மொழியை முடிந்தவரை முன்னிலைப்படுத்துமாறு அழைப்பு விடுத்த அமித்‌ஷா, அதேநேரம் தேசத்தந்தை காந்தியடிகள் மற்றும் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் ஆகியோரின் ஒரே மொழி கனவை நிறைவேற்ற, இந்தியையும் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.

பின்னர் டெல்லியில் நடந்த இந்தி தின நிகழ்ச்சி ஒன்றில் அமித்‌ஷா பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒரு மொழி பேசுவதை புதிய தலைமுறையினர் பெருமையாக எண்ணினால்தான் அந்த மொழியால் நிலைக்க முடியும். ஏராளமான மொழிகளும், அதன் கிளை மொழிகளும் கொண்டிருப்பதுதான் நமது பலம். பெற்றோர் தங்கள் குழந்தைகளிடமும், சக நண்பர்களிடமும் தாய் மொழியில் பேச வேண்டும்.

உள்ளூர் மொழி மீது வெளிநாட்டு மொழிகள் ஆதிக்கம் செலுத்தாதவாறு நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். நமது பேச்சுகளில் ஆங்கில மொழியின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. ஆங்கிலம் இல்லாமல் நம்மால் இந்தியை பேச முடியவில்லை. இந்தி வழியில் கல்வி கற்கும் ஒரு மாணவரிடம் 40 நிமிடங்கள் இந்தியில் பேசுமாறு கூறினால், அவரால் பேச முடியவில்லை.

உள்துறை அமைச்சக பொறுப்புகளை நான் ஏற்றுக்கொண்ட போது, முதல் 10 நாட்களில் இந்தி மொழி குறிப்புடன் கூடிய ஒரு கோப்பு கூட என்னிடம் வரவில்லை. ஆனால் தற்போது 60 சதவீத கோப்புகள் இந்தி குறிப்புகளுடன் வருகின்றன.

கடந்த வாரம் நான் கவுகாத்தியில் இருந்த போது, பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு தனியார் ஆசிரியர்கள் மூலம் இந்தி மொழியை கற்றுக்கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினேன். இப்படி வடகிழக்கு மாநிலங்களில் இந்தியை கற்றுக்கொடுக்க நாங்கள் முடிவு செய்திருக்கிறோம்.

நீதித்துறை, மருத்துவம், மருத்துவ அறிவியல் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இந்தி மொழியின் பயன்பாடு அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்கும். இந்தி மொழியை முன்னிலைப்படுத்துவதால், பிற மொழிகளை அரசு சிறுமைப்படுத்துவதாக அர்த்தமல்ல.

அடுத்த ஆண்டு இந்தி தின நிகழ்ச்சிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படும். 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் இந்தி மொழி மிகப்பெரிய உச்சத்தை அடைந்து விடும். இவ்வாறு அமித்‌ஷா கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் இந்தி மொழி வளர்ச்சிக்கு உதவியவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.


தொடர்புடைய செய்திகள்

1. குடியுரிமை திருத்த சட்டத்தால் நாடே பற்றி எரிகிறது; அமித் ஷா தீயை அணைக்க வேண்டும் - மம்தா பானர்ஜி காட்டம்
குடியுரிமை திருத்த சட்டத்தால், நாடு முழுக்க பற்றி எரியும் தீயை அமித் ஷா அணைக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி வலியுறுத்தி உள்ளார்.
2. 370 பிரிவு ரத்து செய்யப்பட்ட பின் ஜம்மு காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது- அமித் ஷா
370 பிரிவு ரத்து செய்யப்பட்ட பின் ஜம்மு காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது என மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கூறி உள்ளார்.
3. பாகிஸ்தான் அரசின் நிபந்தனையை ஏற்க நவாஸ் ஷெரீப் மறுப்பு - சிகிச்சைக்காக லண்டனுக்கு செல்வதில் தொடரும் சிக்கல்
சிகிச்சைக்காக லண்டன் செல்ல பாகிஸ்தான் அரசு தனக்கு விதித்த நிபந்தனையை ஏற்க முடியாது என நவாஸ் ஷெரீப் மறுத்துவிட்டார்.
4. ராமர் கோவில் அறக்கட்டளையில் அமித் ஷா, யோகி ஆதித்யநாத் - விசுவ இந்து பரிஷத் யோசனை
ராமர் கோவில் அறக்கட்டளையில் அமித் ஷா, யோகி ஆதித்யநாத் ஆகியோரை சேர்க்க வேண்டும் என விசுவ இந்து பரிஷத் யோசனை தெரிவித்துள்ளது.
5. தேர்தலில் போட்டியாளர்கள் இல்லை என்றால் பிரதமர் மோடி, அமித் ஷா பொதுக்‌கூட்டங்கள் நடத்தப்பட்டது ஏன்? பா.ஜனதாவுக்கு, சிவசேனா கேள்வி
தேர்தலில் போட்டியாளர்களே இல்லை என்றால் பிரதமர் மோடி, அமித் ஷா கலந்துகொண்ட இத்தனை பொதுக்கூட்டங்கள் எதற்காக என பா.ஜனதாவுக்கு கூட்டணி கட்சியான சிவசேனா கேள்வி எழுப்பி உள்ளது.