உத்தர பிரதேசத்தில் மகாத்மா காந்தியின் சிலை உடைப்பு


உத்தர பிரதேசத்தில் மகாத்மா காந்தியின் சிலை உடைப்பு
x
தினத்தந்தி 14 Sep 2019 7:52 AM GMT (Updated: 14 Sep 2019 7:52 AM GMT)

உத்தர பிரதேசத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் மகாத்மா காந்தியின் சிலை உடைக்கப்பட்டுள்ளது.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் ஜலான் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ காந்தி இண்டர் காலேஜில் வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் சிலை நேற்று அடையாளம் தெரியாத சில நபர்களால் உடைக்கப்பட்டது. 

இது பற்றிய தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் சிலையின் உடைந்த தலைப்பகுதி சரிசெய்யப்பட்டு மீண்டும் நிறுவப்பட்டது. காந்தியின் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்துப் பேசிய காவல்துறை கூடுதல் சூப்பிரண்டு அவதேஷ் சிங், “மகாத்மா காந்தியின் சிலை 1970 ஆம் ஆண்டு இப்பகுதியில் நிறுவப்பட்டுள்ளது. நேற்று அடையாளம் தெரியாத சில நபர்கள் சிலைக்கு சேதம் விளைவித்துள்ளனர். இது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. கூடிய விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

வரும் அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி வருவதால், அதற்கு முன்னதாக சேதமடைந்த சிலையை நீக்கிவிட்டு புதிய சிலையை நிறுவ வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story