இராணுவத்தில் பணியாற்றி இறந்த மோப்ப நாய்க்கு பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் இரங்கல்


இராணுவத்தில் பணியாற்றி இறந்த மோப்ப நாய்க்கு பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் இரங்கல்
x
தினத்தந்தி 15 Sep 2019 11:55 AM GMT (Updated: 15 Sep 2019 12:17 PM GMT)

இராணுவத்தில் பணியாற்றி இறந்த மோப்ப நாய்க்கு பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

கிழக்கு இராணுவ பிராந்தியத்தில் ‘ டச்’ என்று அழைக்கப்படும் மோப்ப நாய் கடந்த 9 வருடமாக பணியாற்றி வந்தது. கடந்த செப்டம்பர் மாதம் 11-ஆம் நாள் அந்த மோப்ப நாய்  மரணம் அடைந்தது.

பல்வேறு மிகச்சிறந்த சேவைகளினால் பல்வேறு படைப்பிரிவுகளில் மிகுந்த அன்பைப் பெற்றுள்ள டச்சு ஷெப்பர்டு வகையைச் சேர்ந்த மோப்ப நாய் இது. இந்த நாயின் இழப்பு ராணுவத்தினரிடையே மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று டுவிட்டர் பக்கங்களில் ராணுவ உயரதிகாரிகள் பலரும் தங்கள் கண்ணீர் அஞ்சலியை நாயின் பல்வேறு புகைப்படங்களை வெளியிட்டு அதன் பெருமைகளைக் கூறி பதிவிட்டிருந்தனர்.

நேற்று சனிக்கிழமை கொல்கத்தா கிழக்கு கட்டளைப் பிரிவு உயர் ராணுவ அதிகாரிகள் மாலை அணிவித்து மலர்கள் தூவி நாயின் சடலத்திற்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

இராணுவ அதிகாரிகள் இயற்கை மரணம் அடைந்த ’டச்சு ஷெப்பர்டு’ மோப்ப நாய்க்கு இராணுவ மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தினர். 

இந்நிலையில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்  தெரிவித்துள்ள இரங்கல் அறிக்கையில் கூறியுள்ளதாவது:

''பல்வேறு சிஐ/சிடி ஆப்களில் மறைத்து வைக்கப்பட்டுள்ள சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை கண்டுபிடிப்பதில் ராணுவத்தின் கருவியாக செயல்பட்டுவந்தது டச்சு நாய். கிழக்கு கட்டளைப் பிரிவில் கடந்த 9 ஆண்டுகளாக இந்த டச்சு நாய் ராணுவத்தினருக்கு மிகவும் உதவியாக இருந்து ராணுவத்தை பெருமைப்படுத்தியுள்ளது. டச்சு நாயின் இழப்புக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என பதிவிட்டுள்ளார்.

இராணுவ நடவடிக்கையின் போது ’டச்’ மோப்பமிட்டு வெடிகுண்டுகளை கண்டறிந்து இராணுவ வீரர்களுக்கு பெரும் உதவி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story