போக்குவரத்து விதிமீறலுக்கு கடுமையான அபராதம்: கேரளாவில் இப்போது அமலுக்கு வராது - நிதின் கட்காரிக்கு கடிதம் எழுத முடிவு


போக்குவரத்து விதிமீறலுக்கு கடுமையான அபராதம்: கேரளாவில் இப்போது அமலுக்கு வராது - நிதின் கட்காரிக்கு கடிதம் எழுத முடிவு
x
தினத்தந்தி 17 Sept 2019 2:36 AM IST (Updated: 17 Sept 2019 2:36 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் போக்குவரத்து விதிமீறலுக்கு கடுமையான அபராதம் இப்போது அமலுக்கு வராது என்றும், நிதின் கட்காரிக்கு கடிதம் எழுத முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

புதிய மோட்டார் வாகன சட்டம், நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. சில மாநில அரசுகள், அபராத தொகையை குறைத்துள்ளன. மராட்டிய மாநில அரசு, அபராத தொகையை குறைக்குமாறு மத்திய தரைவழி போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரிக்கு கடிதம் எழுதி உள்ளது.

கேரளாவில், ஓணம் கொண்டாட்டம் காரணமாக, அபராத உயர்வு இன்னும் அமலுக்கு வரவில்லை. இந்த நிலையில், கேரள மாநில போக்குவரத்து மந்திரி ஏ.கே.சசீந்திரன், நேற்று உயர்மட்ட ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். அதில், இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

கூட்டம் முடிந்த பிறகு, ஏ.கே.சசீந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், “அபராத தொகை உயர்வு தொடர்பாக சில சந்தேகங்களுக்கு தெளிவு பெற நிதின் கட்காரிக்கு கடிதம் எழுத உள்ளேன். அவரிடம் இருந்து பதில் கிடைக்கும்வரை, புதிய அபராதத்தை அமல்படுத்துவதை மேலும் சில நாட்களுக்கு தள்ளிப்போட முடிவு செய்துள்ளோம்” என்றார்.

Next Story