காஷ்மீரில் வீட்டு காவலில் இருக்கும் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா பாதுகாப்பு சட்டத்தில் கைது - வீடு சிறையாக மாற்றப்பட்டது


காஷ்மீரில் வீட்டு காவலில் இருக்கும் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா பாதுகாப்பு சட்டத்தில் கைது - வீடு சிறையாக மாற்றப்பட்டது
x
தினத்தந்தி 17 Sept 2019 5:45 AM IST (Updated: 17 Sept 2019 3:33 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் வீட்டு காவலில் இருக்கும் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, ஸ்ரீநகரில் உள்ள அவரது வீடு சிறையாக மாற்றப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

ஸ்ரீநகர்,

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை கடந்த மாதம் 5-ந் தேதி ரத்து செய்த மத்திய அரசு, அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்து உத்தரவிட்டது.

இதனால் அந்த மாநிலத்தில் பதற்றநிலை ஏற்பட்டதால், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்-மந்திரியுமான பரூக் அப்துல்லா, அவரது மகனும் முன்னாள் முதல்-மந்திரியுமான உமர் அப்துல்லா, மற்றொரு முன்னாள் முதல்-மந்திரியான மெகபூபா முக்தி மற்றும் சில முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளனர். மேலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதால், மாநிலத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

பரூக் அப்துல்லா 3 முறை காஷ்மீர் மாநிலத்தின் முதல்-மந்தியாக பதவி வகித்து இருக்கிறார். 5 முறை நாடாளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர் ஆவார். தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில், 81 வயதான பரூக் அப்துல்லா நேற்று மதியம் திடீரென்று பொது பாதுகாப்பு சட்டத்தின் (பி.எஸ்.ஏ.) கீழ் கைது செய்யப்பட்டார். இதற்கான நோட்டீஸ் நேற்று மதியம் 1 மணி அளவில் அவருக்கு வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, ஸ்ரீநகர் குப்கார் ரோடு பகுதியில் உள்ள பரூக் அப்துல்லாவின் வீடு சிறையாக மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அங்கு அவர் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டு இருக்கிறார்.

அந்த பகுதியில் போலீசார் தடுப்பு வேலி அமைத்து, கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளனர்.



 

இந்த பொது பாதுகாப்பு சட்டம் பிற மாநிலங்களில் அமலில் உள்ள தேசிய பாதுகாப்பு சட்டத்தை போன்ற சட்டம் ஆகும். இந்த பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஒருவரை 3 முதல் 6 மாதங்கள் விசாரணை இன்றி சிறையில் வைக்கலாம். பின்னர் இதை 2 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும்.

பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பரூக் அப்துல்லா கைது செய்யப்பட்டதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடரப்போவதாக அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், பாரமுல்லா தொகுதியின் எம்.பி.யுமான அக்பர் லோனே நேற்று ஸ்ரீநகரில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

இந்தநிலையில், பரூக் அப்துல்லா வீட்டு காவலில் வைக்கப்பட்டதை எதிர்த்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்து இருந்த ஆட்கொணர்வு மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, எஸ்.ஏ.நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வைகோ தரப்பில் ஆஜரான வக்கீல் அஜ்மல்கான் வாதாடுகையில், “பரூக் அப்துல்லா வீட்டு காவலில் வைக்கப்படவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறுகிறது. ஆனால் அவரைப்பற்றி இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவர் எந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரியவில்லை. இது தொடர்பான அரசியல் சட்ட நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டதா? என்றும் தெரியவில்லை” என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து, மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் இதுபற்றி நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு அவர் பதில் அளிக்கையில், இதுபற்றி மத்திய அரசிடம் உறுதி செய்து கொண்டு தெரிவிப்பதாக கூறினார். அத்துடன், எந்த மாநாட்டுக்காக பரூக் அப்துல்லா அழைக்கப்பட்டாரோ அந்த மாநாடு ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டதால் மனு செயலற்றதாகி விட்டது என்றும் தெரிவித்தார்.

மேலும், ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்ய பரூக் அப்துல்லாவுக்கு வைகோ உறவினர் அல்ல என்பதால், அவரது மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும் துஷார் மேத்தா கூறினார்.

அதை ஏற்க மறுத்த நீதிபதிகள் வைகோ மனுவுக்கு ஒரு வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கும், காஷ்மீர் அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

அத்துடன், வழக்கு விசாரணையை வருகிற 30-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story