கர்நாடகாவில் ஆளில்லா விமானம் பாக்கு தோட்டத்தில் விழுந்து நொறுங்கியது


கர்நாடகாவில் ஆளில்லா விமானம் பாக்கு தோட்டத்தில் விழுந்து நொறுங்கியது
x
தினத்தந்தி 17 Sept 2019 12:15 PM IST (Updated: 18 Sept 2019 2:19 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் சோதனை ஓட்டத்தின்போது ஆளில்லா விமானம் பாக்கு தோட்டத்தில் விழுந்து நொறுங்கியது.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் குதாபுரா பகுதியில் விமானப்படை பயிற்சி தளம் உள்ளது. இந்த பயிற்சி தளத்தில் இருந்து நேற்று காலை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துக்கு (டி.ஆர்.டி.ஓ.) சொந்தமான ‘ரஸ்டம்-2’ என்ற ஆளில்லா விமானத்தின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

அந்த ஆளில்லா விமானம், செல்லகெரே அருகே ஜோடிசில்லேனஹள்ளி பகுதியில் வானில் பறந்தபோது திடீரென பாக்கு தோட்டத்தில் விழுந்து நொறுங்கியது. இதனால் அந்தப்பகுதியில் பயங்கர சத்தம் கேட்டது.

தகவல் அறிந்த போலீசாரும், விமானப்படை பயிற்சி தள அதிகாரிகளும் அங்கு விரைந்து வந்து தோட்டத்தில் விழுந்து நொறுங்கிய ஆளில்லா விமானத்தை பார்வையிட்டனர்.

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கூறுகையில், ‘சோதனை ஓட்டத்தின்போது இந்த ஆளில்லா விமானம் பாக்கு தோட்டத்தில் விழுந்து நொறுங்கி உள்ளது. கீழே விழுந்தபோது, அந்தப்பகுதியில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏதுவும் ஏற்படவில்லை. விமானம் விழுந்து நொறுங்கியது குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிடப்படும்’ என்றார்.

விமானப்படை பயிற்சி தள அதிகாரிகள், தொழில்நுட்ப கோளாறு காரணமாக ‘ரஸ்டம்-2’ ஆளில்லா விமானம் கீழே விழுந்து நொறுங்கி உள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.



Next Story