கர்நாடக பா.ஜனதா எம்.பி.யை ஊருக்குள் நுழையவிடாமல் தடுத்த மக்கள்


கர்நாடக பா.ஜனதா எம்.பி.யை ஊருக்குள் நுழையவிடாமல் தடுத்த மக்கள்
x
தினத்தந்தி 18 Sept 2019 1:54 AM IST (Updated: 18 Sept 2019 1:54 AM IST)
t-max-icont-min-icon

தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் கர்நாடக பா.ஜனதா எம்.பி.யை ஊருக்குள் நுழையவிடாமல் மக்கள் தடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பெங்களூரு,

கர்நாடகாவில் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் பா.ஜனதா எம்.பி.யை ஊருக்குள் நுழைய விடாமல் கிராம மக்கள் தடுத்து நிறுத்தி, அவரை திருப்பி அனுப்பினர். அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா தனி தொகுதியில் பா.ஜனதா சார்பில் தலித் சமூகத்தை சேர்ந்த ஏ.நாராயணசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது தொகுதிக்கு உட்பட்ட துமகூரு மாவட்டத்தில் உள்ள பெம்மனஹள்ளி கிராமத்தில் வளர்ச்சிப்பணிகளை ஆய்வு செய்ய சென்றார். அங்கு கொல்லா சமுதாயத்தினர் வசிக்கும் பகுதியான கொல்லரஹட்டிக்கு மக்களின் குறைகளை கேட்க ஏ.நாராயணசாமி எம்.பி. வந்தார்.

அப்போது, அந்தப்பகுதி மக்கள், எம்.பி.யை ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினர். நீங்கள் தலித் என்பதால், எங்கள் கிராமத்தில் நுழையக்கூடாது, நீங்கள் உள்ளே வருவது எங்களின் பாரம்பரிய மரபுக்கு எதிரானது. கடந்த காலத்திலும் இதுபோல் வந்த மக்கள் பிரதிநிதிகளை நாங்கள் திருப்பி அனுப்பி இருக்கிறோம் என்று கூறி தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.

மக்களின் நலனுக்காக வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ளவே தான் வந்துள்ளதாக அவர் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அதனை கிராம மக்கள் ஏற்கவில்லை. இதையடுத்து அவர் அங்கிருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார். அந்த மக்களிடம் ஏ.நாராயணசாமி பேசும் வீடியோ செய்தி தொலைக் காட்சிகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரணை நடத்தும்படி கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

எம்.பி.க்கு நேர்ந்த இந்த நிகழ்வு குறித்து உயர் போலீஸ் அதிகாரி கூறுகையில், “உள்ளூர் தாசில்தார், சமூக நலத்துறை அதிகாரி, போலீசார் ஆகியோர் அந்த கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டுள்ளோம்” என்றார்.

இந்த சம்பவத்திற்கு மாநில தொழில்துறை மந்திரியாக உள்ள ஜெகதீஷ் ஷெட்டர் கண்டனம் தெரிவித்துள்ளார். நவீன யுகத்தில் மக்கள் பிரதிநிதியாக இருக்கும் ஒரு எம்.பி.க்கு நேர்ந்த இந்த தீண்டாமை கொடுமை கர்நாடகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story