தேசிய செய்திகள்

69-வது பிறந்தநாளை முன்னிட்டு தாயாரிடம் மோடி ஆசி பெற்றார் - சர்தார் சரோவர் அணையில் பூஜை செய்து வழிபாடு + "||" + Modi blessed his mother on the occasion of his 69th birthday - Worship at Sardar Sarovar Dam

69-வது பிறந்தநாளை முன்னிட்டு தாயாரிடம் மோடி ஆசி பெற்றார் - சர்தார் சரோவர் அணையில் பூஜை செய்து வழிபாடு

69-வது பிறந்தநாளை முன்னிட்டு தாயாரிடம் மோடி ஆசி பெற்றார் - சர்தார் சரோவர் அணையில் பூஜை செய்து வழிபாடு
பிரதமர் மோடி தனது 69-வது பிறந்தநாளை முன்னிட்டு, தன் தாயாரிடம் ஆசி பெற்றார். சர்தார் சரோவர் அணை நிரம்பியதற்கு பூஜை செய்து வழிபட்டார்.
ஆமதாபாத்,

பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று 69-வது பிறந்தநாள் ஆகும். இதையொட்டி, நேற்று முன்தினம் அவர் தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு சென்றார்.

பிறந்த நாளான நேற்று காலையில், முதலில் அவர் நர்மதை ஆற்றங்கரையில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு சென்றார். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


பின்னர், நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணைக்கு மோடி சென்றார். அவருடன் குஜராத் மாநில முதல்-மந்திரி விஜய் ரூபானி உள்ளிட்ட மந்திரிகள், அதிகாரிகள் மற்றும் பா.ஜனதா பிரமுகர்களும் சென்றனர்.

2017-ம் ஆண்டு, உயரம் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து, முதல் முறையாக, சர்தார் சரோவர் அணை முழு கொள்ளளவான 138.68 மீட்டரை எட்டி உள்ளது. எனவே, குஜராத் மாநில அரசு அதை ஒரு விழாவாக கொண்டாடுகிறது.

அந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, அணையில் அமைந்துள்ள நர்மதா தேவி சிலையை பிரதமர் மோடி வழிபட்டார். நர்மதை ஆற்று நீரை வரவேற்கும் வகையில், முதல்-மந்திரி விஜய் ரூபானியுடன் இணைந்து பிரதமர் மோடி பூஜை செய்தார்.

பின்னர், பிரதமர் மோடி, காந்திநகரில் உள்ள தன்னுடைய தாயார் ஹீரா பென் இல்லத்துக்கு சென்றார். தாயாரை கைகூப்பி வணங்கினார். அவருக்கு ஹீரா பென் ஆசி வழங்கினார்.

அத்துடன், தாயாருடன் சேர்ந்து மோடி சாப்பிட்டார்.

வண்ணத்து பூச்சி தோட்டத்துக்கு மோடி சென்றார். அங்கு வண்ணத்து பூச்சிகளை பறக்க விட்டார்.

இதைத்தொடர்ந்து, குஜராத் மாநிலம் கேவடியா என்ற இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

சர்தார் வல்லபாய் படேல், தொலைநோக்கு பார்வை கொண்டவர். ‘ஒரே இந்தியா, மாபெரும் இந்தியா’ என்ற கொள்கையை கொண்டிருந்தார். அவரது கொள்கையால் ஈர்க்கப்பட்டுத்தான், இந்த அரசு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கும் முக்கியமான முடிவை எடுத்தது. பல ஆண்டுகளாக நீடித்து வரும் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கண்டு புதிய பாதையில் நடைபோடுவதற்காகவும் அந்த முடிவு எடுக்கப்பட்டது.

ஜம்மு, லடாக் பிராந்திய மக்கள் பாரபட்சமாக நடத்தப்பட்டனர். பிரிவினைவாதத்துக்கும், பயங்கரவாதத்துக்கும் அது வழிவகுத்தது. அதனால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டது. அதற்கு முடிவுகட்டும் வகையில், இந்த முடிவு எடுக்கப்பட்டது. காஷ்மீர், லடாக், கார்கில் ஆகிய பிராந்தியங்களில் உள்ள லட்சக்கணக்கான நண்பர்களின் உதவியுடன், காஷ்மீரின் வளர்ச்சிக்கான புதிய பயணம் தொடங்கப்படும். இவ்வாறு மோடி பேசினார்.