தேசிய செய்திகள்

முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார் மீது அமலாக்கத்துறையில் 200 புகார்கள் + "||" + ED receives about 200 complaints involving D.K. Shivakumar

முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார் மீது அமலாக்கத்துறையில் 200 புகார்கள்

முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார் மீது அமலாக்கத்துறையில் 200 புகார்கள்
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார் மீது 200 புகார்களை அமலாக்கத்துறை பெற்று உள்ளது.
பெங்களூரு,

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமாரை அமலாக்கத் துறையினர் கடந்த 3-ந் தேதி கைது செய்து, 4-ந் தேதி டெல்லி சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

அமலாக்கத்துறையினர் கேட்டுக் கொண்டதை அடுத்து டி.கே.சிவக்குமாரை 9 நாட்கள் அதாவது 13-ந் தேதி வரை அமலாக்கத் துறையின் காவலுக்கு அனுப்பி கோர்ட்டு உத்தரவிட்டது.

அதன் பிறகு கடந்த 13-ந் தேதி டி.கே.சிவக்குமாரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய அமலாக்கத் துறையினர், மேலும் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் காவலை நீட்டிக்குமாறு கேட்டனர். இதை ஏற்றுக்கொண்ட டெல்லி சிறப்பு கோர்ட்டு, டி.கே.சிவக்குமாருக்கு வழங்கப்பட்ட அமலாக்கத்துறையின் காவலை மேலும் 4 நாட்கள் 17-ந் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.

இந்த நிலையில் போலீஸ் காவல் முடிவடைந்ததை அடுத்து டி.கே.சிவக்குமாரை அமலாக்கத்துறையினர் நேற்று டெல்லி சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.  டி.கே.சிவக்குமாரை அக்டோபர் 1-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டது. அவருடைய ஜாமீன் மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது.

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் சிவகுமார் மீது  சுமார் 200 புகார்களை அமலாக்க இயக்குநரகம் பெற்றுள்ளது. இது குறித்து  மூத்த அமலாக்கதுறை அதிகாரி ஒருவர் கூறும் போது, 

சிவகுமாரின் நிதி முறைகேடுகளில் பங்கு இருப்பதாக குற்றம் சாட்டிய ஏராளமான நபர்களிடமிருந்து 200 புகார்களை நாங்கள் இதுவரை பெற்றுள்ளோம். அவற்றின் நம்பகத்தன்மையை தீர்மானிக்க அவற்றை ஆய்வு செய்து வருகிறோம். இந்த புகார்கள்  வீடு கட்டும் திட்டத்தில் முதலீட்டாளர்களிடமிருந்து வந்தவை, அவர்கள் முதலீட்டை இழந்ததாகக் குற்றம் சாட்டி உள்ளனர்.

சிவகுமாருடன் நெருக்கமாக இருப்பதாக சந்தேகிக்கப்படும் எம்.எல்.ஏ,வுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால்  அவர் விசாரணைக் குழு முன் ஆஜராகவில்லை. அவர் சார்பில்  விலக்கு கோரப்பட்டது. விசாரணையில் ஒத்துழைப்பு கோரி மற்றொரு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது, 

டி.கே.சிவக்குமார் குடும்பத்தினர் 20 வங்கிகளில் 317 வங்கி கணக்குகளை வைத்துள்ளனர். இந்த கணக்குகள் 46 நபர்களின் பெயரில் இருந்தன என்பது இதுவரை விசாரணையில் தெரிய வந்துள்ளது.  பணத்தின் வரவு மற்றும் எடுத்த விவரங்கள்  ஆராயப்படுகின்றன என்று அந்த அதிகாரி கூறினார்.