நாடு முழுவதும் இ சிகரெட்டிற்கு தடை: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்


நாடு முழுவதும் இ சிகரெட்டிற்கு தடை: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
x
தினத்தந்தி 18 Sep 2019 10:10 AM GMT (Updated: 18 Sep 2019 10:10 AM GMT)

நாடு முழுவதும் இ சிகரெட்டிற்கு தடை விதிக்கப்படுவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

புதுடெல்லி,

நாடு முழுவதும் இ சிகரெட்டிற்கு தடை விதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் பேட்டி அளித்தனர். அப்போது, நாடு முழுவதும் இ சிகரெட்டிற்கு தடை விதிக்கப்படுவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மேலும், இ சிகரெட் உற்பத்தி, ஏற்றுமதி,  விற்பனை, இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

இ சிகரெட்டை தடை செய்வதற்கான அவசர சட்டம் 2019, சமீபத்தில்  அமைச்சரவை குழுவால் ஆய்வுக்குள்ளாக்கப்பட்டது. பிரதமர் அலுவலகத்தின் உத்தரவின் பேரில் அமைச்சரவை குழு ஆய்வு மேற்கொண்டது. இந்த வரைவு அவசரச் சட்டத்தில், இ சிகரெட் தடையை முதல் முறை மீறுபவர்களுக்கு  அதிகபட்சம் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இ சிகரெட் என்றால் என்ன?

இ-சிகரெட் பார்ப்பதற்கு சிகரெட்டைப் போலவே இருக்கிற ஒரு மின்னணுக் கருவி. இதனுள்ளே நிகோடின் மற்றும் புரோபைலின் கிளைக்கால் திரவம் நிரப்பப்பட்ட குப்பி இருக்கும். அதைச் சூடுபடுத்தும் சிறு கருவியும் பேட்டரியும் இருக்கும். சிகரெட்டைப் புகைக்க நினைக்கும்போது, இதை வாயில் வைத்து உறிந்தால், அப்போது ஏற்படும் விசையால், பேட்டரி இயங்கும். சிலவற்றில் இதை இயக்க ஒரு பொத்தான் இருக்கும். இதை அழுத்தியதும், நிகோடின் சூடேறி புகை கிளம்பும். புகைப்பவர் இதை உள்ளிழுக்க, புகையிலை சிகரெட்டைப் புகைப்பது போன்ற திருப்தியை ஏற்படுத்தும்.

Next Story