டெல்லியில் காணாமல் போன யானை 2 மாதங்களுக்கு பிறகு கண்டுபிடிப்பு


டெல்லியில் காணாமல் போன யானை 2 மாதங்களுக்கு பிறகு கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 18 Sep 2019 9:12 PM GMT (Updated: 18 Sep 2019 9:12 PM GMT)

டெல்லியில் காணாமல் போன யானை 2 மாதங்களுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டது.

புதுடெல்லி,

டெல்லி சாகாபூர் பகுதியை சேர்ந்தவர் யூசுப் அலி. இவர் ஒரு யானை வளர்த்து வந்தார். 47 வயதான அந்த பெண் யானையை செல்லமாக “லட்சுமி” என்று அழைப்பார். சதாம் என்ற பாகன் லட்சுமியை பராமரித்து வந்தார்.

இதற்கிடையே யானை லட்சுமியை சரியாக பராமரிக்கவில்லை என்று கூறி யூசுப் அலிக்கு, வனத்துறை நோட்டீஸ் அனுப்பியது. யானையை பறிமுதல் செய்யப்போவதாக அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் யூசுப், டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடினார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், யானையை பராமரிப்பதற்கான இடத்தை ஏற்பாடு செய்தபின் யானையை பறிமுதல் செய்யும்படி உத்தரவிட்டது. அதன்படி கடந்த ஜூலை 6-ந்தேதி, வனத்துறையினர் யானையை பறிமுதல் செய்ய முற்பட்டபோது யூசுப் அலி, அவருடைய மகன் மற்றும் உறவினர்கள் அதிகாரிகளை தாக்கிவிட்டு, லட்சுமியுடன் வனப்பகுதிக்கு தப்பிவிட்டனர்.

இதனால் வனத்துறையினர் கடந்த 2 மாதங்களாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். வெளிமாநில வனவிலங்கு அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். சுமார் 12 அதிகாரிகள் அடங்கிய மூன்று அணிகள் யமுனா நதி மற்றும் உத்தரபிரதேசம், டெல்லி எல்லை பகுதியில் தேடுதல் மேற்கொண்டனர். அப்போது லட்சுமி யானையை யமுனா புஷ்தா என்ற பகுதியில் கண்டுபிடித்தனர். யானையுடன் இருந்த பாகன் சதாமை போலீசார் கைது செய்தனர்.

“யானை லட்சுமியை மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அரியானாவில் உள்ள பான் சாந்தூர் யானைகள் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைப்போம்” என்று வன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story