தலைமை நீதிபதிக்கு உடல்நலக்குறைவு: அயோத்தி வழக்கு தற்காலிகமாக ஒத்திவைப்பு
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உடல்நலக்குறைவு காரணமாக அயோத்தி வழக்கு தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை ராம் லல்லா, நிர்மோகி அகாரா, சன்னி வக்பு வாரியம் ஆகிய மூன்றும் சரிசமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என்று அலகாபாத் ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.
இந்த மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூசண், எஸ்.அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த நிலையில், இந்த பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் சமரச தீர்வு காண, சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி கலிபுல்லா தலைமையில் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீரவிசங்கர், மூத்த வக்கீல் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோரை கொண்ட சமரச குழுவை அரசியல் சாசன அமர்வு அமைத்தது.
அந்த சமரச குழு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், கடந்த மாதம் 6-ந் தேதி முதல் மேல்முறையீட்டு வழக்கை அரசியல் சாசன அமர்வு தினந்தோறும் விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் நிர்மோகி அகாரா, ராம் லல்லா தரப்பு வாதங்கள் முடிவடைந்து, கடந்த சில நாட்களாக சன்னி வக்பு வாரியத்தின் தரப்பிலான வாதம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, பிரச்சினைக்கு சமரச முறையில் தீர்வு காண விரும்புவதாக கூறி சிலர் தரப்பில் இருந்து தனக்கு கோரிக்கை வந்து இருப்பதாக சமரச குழுவின் தலைவரான சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி கடிதம் எழுதி இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
எனவே, சமரச குழு விரும்பினால் சம்பந்தப்பட்டவர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும், பேச்சுவார்த்தை தொடர்பான ரகசிய தன்மை பாதுகாக்கப்படவேண்டும் என்றும் அப்போது நீதிபதிகள் கூறினார்கள்.
தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, இந்த வழக்கில் அனைத்து தரப்பினரும் அக்டோபர் 18-ந் தேதிக்குள் தங்கள் தரப்பு வாதங்களை முடித்துக் கொள்ள வேண்டும் என்று கோர்ட்டு விரும்புவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வருகிற நவம்பர் 17-ந் தேதி ஓய்வு பெற இருக்கும் நிலையில், அக்டோபர் 18-ந் தேதிக்குள் வாதங்களை முடித்துக் கொள்ளுமாறு அரசியல் சாசன அமர்வு கேட்டுக்கொண்டு உள்ளது.
இந்த நிலையில், தலைமை நீதிபதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அயோத்தி வழக்கின் விசாரணை தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அயோத்தி வழக்கின் விசாரணையை அக்.18 க்குள் நடத்தி முடிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் நேற்று கெடு விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story