கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் மத்திய மந்திரி பபுல் சுப்ரியோ தாக்கப்படும் படங்களை வெளியிட்டார்


கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் மத்திய மந்திரி பபுல் சுப்ரியோ தாக்கப்படும் படங்களை வெளியிட்டார்
x
தினத்தந்தி 21 Sept 2019 3:15 AM IST (Updated: 21 Sept 2019 2:20 AM IST)
t-max-icont-min-icon

மத்திய மந்திரி பபுல் சுப்ரியோ கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் தான் தாக்கப்படும் படங்களையும், தாக்கியவர்களின் படங்களையும் வெளியிட்டார்.

கொல்கத்தா,

மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஜடாவ்பூர் பல்கலைக்கழகத்தில் பா.ஜனதா மாணவர் பிரிவு (ஏ.பி.வி.பி.) நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய சுற்றுச்சூழல் இணை மந்திரி பபுல் சுப்ரியோ இடதுசாரி மாணவர் சங்கங்களை சேர்ந்தவர்களால் தாக்கப்பட்டார். மொத்தம் 5 மணி நேரம் சிறைபிடிக்கப்பட்ட அவரை கவர்னர் ஜெக்தீப் தாங்கர் மீட்டுவந்தார்.

பா.ஜனதாவை சேர்ந்த பபுல் சுப்ரியோ அந்த மாநிலத்தில் உள்ள அசன்சோல் தொகுதியில் 2-வது முறையாக எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இந்த சம்பவத்தில் தான் தாக்கப்படும் படங்களையும், தாக்கிய மாணவர்களை அடையாளம் காட்டும் படங்களையும் அவர் தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் நேற்று வெளியிட்டார்.

அதில், “இந்த நபர் தான் தாக்குதலுக்கு தலைமை தாங்கியவர். என்னை தாக்கியதாக அவர் மீது குற்றம் சுமத்துகிறேன். மாநில அரசு அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கிறது என்று பார்ப்போம். இந்த நக்சலைட்டை அடையாளம் காட்டுகிறேன். இவர் பல்கலைக்கழக மாணவரா? ஒருவேளை ஆமாம் என்றால், அவர் ஏன் ஒரு கூட்டத்தை தூண்டிவிட்டு அதுபோல நடந்துகொண்டார்” என்று கூறியுள்ளார்.

அந்த நபர் தேபஞ்சன் என்கிற பிக்கு என்றும், ஐக்கிய மாணவர் ஜனநாயக முன்னணியை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது. அவர் பபுல் சுப்ரியோவின் முடியை பிடித்து இழுப்பது போலவும், சுப்ரியோ வலியால் துடிப்பதுபோலவும் படம் உள்ளது.

மற்றொரு மாணவர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பவன்சுக்லா என தெரியவந்துள்ளது. அவர் மந்திரியை தாக்குவதிலேயே குறியாக இருந்தது தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து இரு பிரிவினரும் போலீசில் புகார் செய்துள்ளனர்.

போராட்டம் நடத்திய மாணவர்கள் தங்கள் சங்கத்தின் அறையில் இருந்த பொருட்களை ஏ.பி.வி.பி. மாணவர்கள் தீவைத்து எரித்ததாக புகார் கொடுத்தனர். மத்திய மந்திரியுடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பா.ஜனதா தலைவர் அக்னிமித்ரா பால் தாக்குதல் குறித்து புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story