மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு
மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு வருகிற அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது.
புதுடெல்லி,
மராட்டிய மாநிலத்தில் பாரதீய ஜனதா-சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 288 உறுப்பினர்களை கொண்ட அந்த மாநில சட்டசபையின் பதவி காலம் வருகிற நவம்பர் மாதம் 9-ந் தேதி முடிவடைகிறது.
இதேபோல் பாரதீய ஜனதா ஆட்சி நடைபெற்று வரும் அரியானா மாநிலத்தில், 90 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையின் பதவி காலம் நவம்பர் 2-ந் தேதியுடன் நிறைவடைகிறது.
இதைத்தொடர்ந்து, அந்த இரு மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் கமிஷன் தீவிரமாக ஆலோசித்து வந்தது.
இந்த நிலையில், மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு வருகிற அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று டெல்லியில் தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா நேற்று அறிவித்தார். அப்போது தேர்தல் கமிஷனர்கள் அசோக் லாவாசா, சுஷில் சந்திரா ஆகியோரும் உடன் இருந்தார்.
இரு மாநிலங்களுக்கான தேர்தல் அட்டவணையை தலைமை தேர்தல் கமிஷனர் வெளியிட்டு உள்ளார்.
அதன்படி, இரு மாநிலங்களிலும் வருகிற 27-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் அக்டோபர் 4-ந் தேதி. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் 5-ந் தேதி நடைபெறும். போட்டியில் இருந்து விலக விரும்புவோர் தங்கள் மனுக்களை வாபஸ் பெற அக்டோபர் 7-ந் தேதி கடைசி நாள் ஆகும்.
அக்டோபர் 21-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். அக்டோபர் 24-ந் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
மராட்டிய மாநிலத்தில் 8 கோடியே 90 லட்சம் வாக்காளர்களும், அரியானாவில் 1 கோடியே 82 லட்சம் வாக்காளர்களும் உள்ளனர்.
மராட்டியத்தில் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா 122 இடங்களையும், சிவசேனா 63 இடங்களையும் கைப்பற்றின. பின்னர் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தன. காங்கிரசுக்கு 42 இடங்கள் கிடைத்தன.
அதே ஆண்டில் அரியானாவில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா 47 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரசிடம் இருந்து ஆட்சியை பறித்தது. இந்திய தேசிய லோக்தளம் கட்சிக்கு 19 இடங்களும், காங்கிரசுக்கு 15 இடங்களும் கிடைத்தன.
இரு மாநில சட்டசபை தேர்தலுடன் இந்தியா முழுவதும் 18 மாநிலங்களில் காலியாக உள்ள 64 சட்டசபை தொகுதிகளுக்கும், பீகார் மாநிலம் சமஸ்திபூர் நாடாளுமன்ற தொகுதிக்கும் அக்டோபர் 21-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது.
இந்த தொகுதிகளில் பதிவாகும் வாக்குகளும் அக்டோபர் 24-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
மாநிலங்கள் வாரியாக இடைத்தேர்தல் நடைபெறும் சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை வருமாறு:-
தமிழ்நாடு- 2
கர்நாடகம்- 15
உத்தரபிரதேசம்- 11
கேரளா- 5
பீகார்- 5
அசாம்- 4
பஞ்சாப்- 4
குஜராத்- 4
சிக்கிம்- 3
ராஜஸ்தான்- 2
இமாசலபிரதேசம்- 2
புதுச்சேரி, அருணாசலபிரதேசம், சத்தீஷ்கார், தெலுங்கானா, மத்தியபிரதேசம், மேகாலயா, ஒடிசா மாநிலங்களில் தலா ஒரு தொகுதி.
கர்நாடகத்தில் 15 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாலும், உத்தரபிரதேசத்தில் எம்.எல்.ஏ.க்களாக இருந்த 11 பேர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி.க்கள் ஆகிவிட்டதாலும் காலியான தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
பீகார் மாநிலம் சமஸ்திபூர் நாடாளுமன்ற தொகுதியில் இருந்து லோக் ஜனசக்தி கட்சியின் சார்பில் தேர்ந்து எடுக்கப்பட்ட ராம்சந்திர பஸ்வான் (மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வானின் தம்பி) கடந்த ஜூலை மாதம் மரணம் அடைந்ததால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
Related Tags :
Next Story