2-வது முறையாக பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் - தேவேந்திர பட்னாவிஸ்


2-வது முறையாக பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் - தேவேந்திர பட்னாவிஸ்
x
தினத்தந்தி 21 Sept 2019 4:33 PM IST (Updated: 21 Sept 2019 4:33 PM IST)
t-max-icont-min-icon

மகாராஷ்டிரத்தில் 2-வது முறையாக பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் என்று அம்மாநில முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

தானே,

மகாராஷ்டிர  மாநிலத்தின் சட்டசபையின் பதவிக் காலம் நவம்பர் 7-ம் தேதி முடிவதையடுத்து தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது. அதன்படி மாநிலத்தில் உள்ள 288 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரு கட்டமாக அக்டோபர் 21-ம் தேதி தேர்தலும், 24-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துவிட்டன. ஆனால், சிவசேனா, பாஜகவுக்கு இடையே தொகுதிகளை பிரித்துக் கொள்வதில் இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை. தொகுதிகளைப் பிரிப்பதில் இரு கட்சிகளுக்கும் இழுபறி நீடித்தாலும், இரண்டொரு நாட்களில் முடிவுக்கு வந்துவிடும் எனத் தெரிகிறது.

இந்தநிலையில் அம்மாநில முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- 

ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழாவான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  அனைவரும் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.  ஜனநாயகத்தில், மக்கள் அரசாங்கத்தை கேள்வி கேட்கிறார்கள் மற்றும் அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளனர், அவ்வாறு வாக்களிப்பவர்களுக்கு மட்டுமே கேள்வி கேட்க தார்மீக உரிமை உண்டு. சிறப்பான வெற்றியைப் பெற்று மீண்டும் 2-வது முறையாக நான் முதல்-மந்திரியாக வருவேன்.  2-வது முறையாக பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் பணியாற்றுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story