ரூ.300 கோடி போதைப்பொருளுடன் வந்த படகை சுற்றிவளைத்த கடற்படை - மியான்மரை சேர்ந்த 6 பேர் கைது


ரூ.300 கோடி போதைப்பொருளுடன் வந்த படகை சுற்றிவளைத்த கடற்படை - மியான்மரை சேர்ந்த 6 பேர் கைது
x
தினத்தந்தி 22 Sept 2019 3:30 AM IST (Updated: 22 Sept 2019 2:44 AM IST)
t-max-icont-min-icon

அந்தமான் கடற்பகுதியில் ரூ.300 கோடி போதைப்பொருளுடன் வந்த படகை கடற்படையினர் சுற்றி வளைத்தனர். அதில் இருந்த மியான்மர் நாட்டை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

போர்ட்பிளேர்,

இந்திய யூனியன் பிரதேசமான அந்தமான் நிகோபர் தீவுகள் வான் எல்லையில் கடற்படைக்கு சொந்தமான ‘டோர்னியர்’ விமானம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தது.

அப்போது கார்நிகோபர் தீவில் இருந்து 140 கடல்மைல் தூரத்தில் உள்ள கார்னீக் தீவு அருகே மர்ம படகு ஒன்று சென்று கொண்டிருப்பதை கடற்படை வீரர்கள் கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து அவர்கள் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடற்படை கப்பலான ராஜ்வீரில் இருந்த பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ‘ராஜ்வீர்’ கப்பல், அந்த மர்ம படகை சுற்றிவளைத்தது.

அந்த படகில் மியான்மர் நாட்டை சேர்ந்த 6 பேர் இருந்தனர். கடற்படை அதிகாரிகள் அந்த படகை சோதனையிட்டனர். அதில் 57 சாக்குமூட்டைகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தன.

அவற்றை பிரித்து பார்த்தபோது அதன் உள்ளே 1,160 பாக்கெட்டுகளில் தலா 1 கிலோ எடை கொண்ட ‘கீட்டமைன்’ என்ற போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது. இவற்றின் சர்வதேச மதிப்பு ரூ.300 கோடியாகும்.

இந்த போதைப்பொருளை தாய்லாந்துக்கு கடத்தி செல்வது தெரியவந்தது. இதனையடுத்து கடற்படையினர், மியான்மர் நாட்டை சேர்ந்த 6 பேரை கைது செய்தனர்.

அவர்கள் வைத்திருந்த போதைப்பொருளையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை கொல்கத்தாவில் உள்ள போதைப்பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.


Next Story