டெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரத்துடன் சோனியா காந்தி, மன்மோகன் சிங் சந்திப்பு


டெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரத்துடன் சோனியா காந்தி, மன்மோகன் சிங் சந்திப்பு
x
தினத்தந்தி 23 Sept 2019 10:54 AM IST (Updated: 24 Sept 2019 2:03 AM IST)
t-max-icont-min-icon

திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்தை நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் சந்தித்தனர்.

புதுடெல்லி,

முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் நேற்று திகார் சிறைக்கு சென்று ப.சிதம்பரத்தை சந்தித்தனர். அவர்களுடன் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமும் சென்றார். அவர்கள் இருவரும் சுமார் அரை மணி நேரம் ப.சிதம்பரத்துடன் பேசிக்கொண்டிருந்தனர்.

ப.சிதம்பரத்திடம் அவரது உடல்நலம் குறித்து சோனியா காந்தி விசாரித்தார். காங்கிரஸ் கட்சி முழுமையாக உங்களுக்கு ஆதரவாக இருக்கும் என்றும், இந்த வழக்கை காங்கிரஸ் அரசியல்ரீதியாக தொடர்ந்து எதிர்க்கும் என்றும் அவர் ப.சிதம்பரத்திடம் தெரிவித்தார்.

மன்மோகன்சிங்கும் நீண்ட நேரம் ப.சிதம்பரத்துடன் பேசினார். அப்போது அவர்கள் மத்திய அரசின் ஜி.எஸ்.டி. சலுகை, கம்பெனி வரிகள் குறைப்பு ஆகியவை குறித்தும், இவைகள் நாட்டின் பொருளாதாரத்தில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பது குறித்தும் விவாதித்ததாக கூறப்படுகிறது.

ப.சிதம்பரம் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் அவர் சார்பில் அவரது குடும்பத்தினர் டுவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர். சோனியா காந்தி சந்திப்பு குறித்து ப.சிதம்பரம், “சோனியா காந்தியும், மன்மோகன் சிங்கும் என்னை சந்தித்ததன் மூலம் நான் கவுரவிக்கப்பட்டதாக கருதுகிறேன். காங்கிரஸ் கட்சி நீண்டகாலமாக வலிமையுடனும், துணிவுடனும் செயல்படுகிறது. நானும் வலிமையாகவும், துணிவுடனும் இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் ‘இந்தியாவில் அனைத்தும் நன்றாக இருக்கிறது’ என்று கூறியது பற்றி ப.சிதம்பரம், “வேலையில்லா திண்டாட்டம், இருக்கிற வேலைகளும் பறிபோவது, குறைந்த சம்பளம், கும்பலாக வன்முறையில் ஈடுபடுவது, காஷ்மீரில் முழு அடைப்பு, எதிர்க்கட்சி தலைவர்களை சிறையில் தள்ளுவது ஆகியவைகளை தவிர்த்து இந்தியாவில் அனைத்தும் நன்றாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

கார்த்தி சிதம்பரமும், “சோனியா காந்தியும், மன்மோகன்சிங்கும் ப.சிதம்பரத்தை சந்தித்ததில் நானும், எனது தந்தையும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். இந்த அரசியல் போராட்டத்தில் இது எங்களுக்கு ஆதரவையும், வலிமையையும் அளித்துள்ளது” என்று கூறியுள்ளார்.


Next Story