ஹைதராபாத்: மெட்ரோ ரெயில் நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் பலி


ஹைதராபாத்: மெட்ரோ ரெயில் நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் பலி
x
தினத்தந்தி 23 Sept 2019 5:59 PM IST (Updated: 23 Sept 2019 6:00 PM IST)
t-max-icont-min-icon

மெட்ரோ ரெயில் நிலையத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் இளம்பெண் ஒருவர் பலியானார்.

ஹைதராபாத்,

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில் உள்ள குகாட்பள்ளி வீட்டு வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் ஹரிகாந்த் ரெட்டி. இவரது மனைவி மவுனிகா தனது உறவினரான லிகிதா என்ற பெண்ணுடன் அமீர்பேட் பகுதிக்கு மெட்ரோ ரெயிலில் சென்றார். லிகிதா தங்கி படிப்பதற்காக அங்குள்ள ஒரு விடுதியை பார்ப்பதற்காக இருவரும் சென்றிருந்தனர்.

அமீர்பேட் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு அவர்கள் இருவரும் வந்து சேர்ந்த போது மழை பெய்து கொண்டிருந்ததால், வெளியே செல்லாமல் ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக ரெயில் நிலையத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி உடைந்து மவுனிகாவின் தலையில் விழுந்தது. தலையில் பலத்த காயமடைந்த மவுனிகா உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மவுனிகா பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மவுனிகாவின் கணவர் ஹரிகாந்த் ரெட்டி எஸ்.ஆர்.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து ஹைதராபாத் மெட்ரோ ரெயில்  மேலாளர் என்.வி.எஸ்.ரெட்டி, “கான்க்ரீட் கூரையின் கூர்மையான பகுதி சுமார் ஒன்பது மீட்டர் உயரத்திலிருந்து விழுந்ததில் இளம் பெண் ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். அவரது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

Next Story