கேரள முதல்-மந்திரியுடன் ராகுல் காந்தி சந்திப்பு: வெள்ள நிவாரணம், இரவு நேர போக்குவரத்து தடை குறித்து விவாதம்


கேரள முதல்-மந்திரியுடன் ராகுல் காந்தி சந்திப்பு: வெள்ள நிவாரணம், இரவு நேர போக்குவரத்து தடை குறித்து விவாதம்
x
தினத்தந்தி 1 Oct 2019 11:11 AM IST (Updated: 2 Oct 2019 4:05 AM IST)
t-max-icont-min-icon

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை, ராகுல் காந்தி சந்தித்து பேசினார். அப்போது வெள்ள நிவாரணம் மற்றும் இரவு நேர போக்குவரத்து தடை குறித்து அவர்கள் விவாதித்தனர்.

புதுடெல்லி,

கேரளாவில் கடந்த ஆகஸ்டு மாதம் பருவமழை கொட்டித் தீர்த்தது. வயநாடு, கோழிக்கோடு உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் ஏராளமானோர் உயிரிழந்தனர். மேலும் பலரின் வீடுகள் தரைமட்டமாகியதால், அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இதையடுத்து காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி. யுமான ராகுல்காந்தி 2 முறை கேரளாவுக்கு வந்து சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டார். மேலும் மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளையும் வழங்கினார்.

கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் சரணாலயம் பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை கேரளா மற்றும் கர்நாடகாவில் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை ராகுல் காந்தி டெல்லியில் உள்ள கொச்சி இல்லத்தில் சந்தித்து பேசினார். அவருடன் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், சுல்தான் பதேரி தொகுதி எம்.எல்.ஏ. பாலகிருஷ்ணன் ஆகியோரும் சென்றனர். சுமார் 20 நிமிடம் நடந்த இந்த சந்திப்பின்போது, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு தேவையான உதவிகள் வழங்குவது பற்றியும், இரவு நேர போக்குவரத்து தடை குறித்தும் விவாதித்தனர்.

பின்னர் நிருபர்களிடம் ராகுல்காந்தி கூறியதாவது:-

“மழை வெள்ள நிவாரணம் குறித்து பினராயி விஜயனுடன் விவாதித்தேன். மேலும் புலிகள் சரணாலய பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது பற்றியும், அதற்கு மாற்று ஏற்பாடாக வேறு வழியில் போக்குவரத்தை இயக்குவது பற்றியும் விவாதித்தோம். இது குறித்து மத்திய மந்திரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார்” என்றார்.


Next Story