வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகளில் புகார் செய்தாலே கைது செய்யலாம் - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு


வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகளில் புகார் செய்தாலே கைது செய்யலாம் - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
x
தினத்தந்தி 2 Oct 2019 4:45 AM IST (Updated: 2 Oct 2019 3:52 AM IST)
t-max-icont-min-icon

வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகளில் புகார் செய்தாலே கைது செய்யலாம் என சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது.

புதுடெல்லி,

எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகளில் புகார் செய்தாலே, புகாருக்கு ஆளானவரை எந்தவித விசாரணையும் இன்றி கைது செய்யலாம் என்ற நிலை இருந்து வந்தது.

ஆனால் இந்த சட்ட பிரிவு தவறாக பயன்படுத்தப்படுவதாக கூறி, அதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கை நீதிபதிகள் ஆதர்ஷ் கோயல், யு.யு. லலித் ஆகியோர் விசாரித்தனர். முடிவில், வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகளில் விசாரணை நடத்தி, உரிய அதிகாரியின் அனுமதியைப் பெற்றுத்தான் கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் தீர்ப்பு அளித்தனர்.

ஆனால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 20-ந்தேதி வழங் கப்பட்ட இந்த தீர்ப்பானது, வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப்போகச்செய்யும் முயற்சி என கூறி, அதற்கு எதிராக பரவலாக போராட்டங்கள் நடைபெற்றன.

இதையடுத்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தை கடுமையாக்கி மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்தது. இதன்படி, இந்த வழக்குகளில் புகாருக்கு ஆளானவர்கள், முன் ஜாமீன் பெற முடியாத நிலை உருவானது.

அத்துடன், 2 நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யுமாறு மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.

இந்த மறு ஆய்வு மனுவை நீதிபதிகள் அருண் மிஷ்ரா, எம்.ஆர். ஷா, பி.ஆர். கவாய் ஆகியோர் அமர்வு விசாரித்தது. இந்த அமர்வின் முன், மறு ஆய்வு மனு கடந்த 18-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது 2 நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பு குறித்து 3 நீதிபதிகள் அமர்வு கடுமையாக விமர்சித்தது.

இது தொடர்பாக நீதிபதிகள் குறிப்பிடுகையில், “இந்த தீர்ப்பு அரசியல் சாசனத்தின் நோக்கத்துக்கு எதிரானது. சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பதாலேயே அரசியல் சாசனத்துக்கு எதிராக ஒரு உத்தரவை பிறப்பிக்க முடியுமா?” என கேள்வி எழுப்பினர்.

அத்துடன் மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபாலிடம் நீதிபதிகள், “நாடு விடுதலை அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும்கூட, எஸ்.சி., எஸ்.டி., மக்களை அரசால் பாதுகாக்க முடியவில்லை. அவர்கள் பாகுபாடு மற்றும் தீண்டாமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்” என வேதனை வெளிப்படுத்தினர்.

கே.கே.வேணுகோபால், 2018-ல் வழங்கிய தீர்ப்பு அரசியல் சாசனத்துக்கு உகந்ததாக இல்லை என்று கூறி வாதிட்டார்.

தொடர்ந்து அனைத்து தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில், 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 20-ந்தேதியன்று 2 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து, 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு நேற்று அதிரடியாக தீர்ப்பு அளித்தது.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு, வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகளில் இனி புகார் செய்தாலே, புகாருக்கு ஆளானவரை விசாரணையின்றி கைது செய்யலாம் என்ற நிலையை கொண்டு வந்துள்ளது.


Next Story