ராஜஸ்தான் பொக்ரான் பகுதியில் பலத்த குண்டு வெடிப்புகள் ; மக்கள் அச்சம்
ராஜஸ்தான் பொக்ரான் பகுதியில் தொடர்ந்து பலத்த குண்டு வெடிப்புகள் சத்தம் வந்ததை அடுத்து பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டம் தார் பாலைவனம் பொக்ரான் பகுதியில் நேற்று மாலை ஐந்து அல்லது அதற்கும் மேற்பட்ட குண்டு வெடிப்புகள் சத்தம் தொடர்ந்து வந்தது. இதனால் வீடுகள்- கட்டிடங்கள் குலுங்கின. வீட்டில் இருந்த மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து பீதியுடன் வெளியே வந்தனர்.
குண்டு வெடிப்புகள் எல்லையைத் தாண்டி பாகிஸ்தான் பகுதியில் இருந்து வந்ததாக மக்கள் நினைத்தனர்.
பலத்த வெடி சத்தம் கேட்டதை அடுத்து ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டம் முழுவதும் பீதி ஏற்பட்டது.
இது குறித்து இந்திய ராணுவ தரப்பு கூறும்போது, "தார் பாலைவனத்தின் பொக்ரான் பகுதியில் நேற்று மாலை 6.30 மணி முதல் இரவு 7.15 மணி வரை பழைய பீரங்கி குண்டுகள் அழிக்கப்பட்டன”.
இது ஒரு வழக்கமான நிகழ்வுதான் என்றும், அதில் அசாதாரணமானது எதுவும் இல்லை என்றும் கூறப்பட்டது.
குண்டுவெடிப்புகளின் சத்தம் எல்லையைத் தாண்டியபோது, பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர், இந்தியா "அணுஆயுதம் மற்றும் தந்திரோபாய அணு ஆயுத சோதனையை" நடத்துவதாக போலி பிரசாரத்தை நடத்தத் தொடங்கி உள்ளனர்.
ஆனால் ஆயுத பாதுகாப்புப்படைகளின் வட்டாரங்கள் "இது பழைய பீரங்கி குண்டுகளை அழிப்பது மட்டுமே, பீதியடைய ஒன்றுமில்லை" என்று தெளிவுப்படுத்தியது.
மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில், வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, ராஜஸ்தான் மாநிலம், பொக்ரானில் 1998-ம் ஆண்டு மே மாதம் 11, 13 தேதிகளில் அணுகுண்டு சோதனைகள் (பொக்ரான்-2) நடைபெற்றன.
1995-ம் ஆண்டு அணுகுண்டு சோதனை நடத்த நரசிம்மராவ் முடிவு செய்து, அதற்கான ஆயத்தங்களை செய்யுமாறு அப்துல் கலாமிடம் கூறினாலும்கூட, பொக்ரான் அணுகுண்டு சோதனைக்கு ஏற்பாடுகள் நடந்து வருவதை செயற்கைகோள் மூலம் தெரியவந்து, அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன், நரசிம்மராவை நிர்ப்பந்தித்து தடுத்து விட்டதாகவும் அந்தக் காலக்கட்டத்தில் தகவல்கள் வெளியாகின. அதன்பின்னர் வாஜ்பாய் பிரதமர் ஆன பின்னர், அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது நினைவுகூரத்தக்கது.
Related Tags :
Next Story