முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் 115-வது பிறந்தநாள் ; பிரதமர் மோடி மரியாதை


முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் 115-வது பிறந்தநாள் ; பிரதமர் மோடி மரியாதை
x
தினத்தந்தி 2 Oct 2019 12:40 PM IST (Updated: 2 Oct 2019 12:40 PM IST)
t-max-icont-min-icon

மறைந்த முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் 115-வது பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

புதுடெல்லி,

மறைந்த முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் 115-வது பிறந்தநாள் நாடு முழுவதும் தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. இதுகுறித்து பிரதமர் நரேந்திரமோடி தனது ட்விட்டர் பக்கத்தில் லால் பகதூர் சாஸ்திரியை நினைவுக்கூர்ந்து ட்விட் செய்துள்ளார்.

லால் பகதூர் சாஸ்திரியின் புகைப்படங்கள் கொண்ட வீடியோ பதிவுடன் அவரின் மன உறுதியையும் கதர் உடை மீதான அவரது பிடிப்பையும் பிரதமர் மோடி நினைவு கூர்ந்துள்ளார்.

மறைந்த முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் 115-வது பிறந்தநாளையொட்டி டெல்லி விஜய்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

உத்தரபிரதேச மாநிலம் முகல்சராயில் 1904-ம் ஆண்டு பிறந்த லால் பகதூர் சாஸ்திரி, சுதந்திரப் போராட்ட வீரர்களில் முக்கியமானவர் ஆவார். ஜவஹர்லால் நேருவை தொடர்ந்து இந்தியாவின் 2-வது பிரதமராக லால் பகதூர் சாஸ்திரி பதவி ஏற்றார். அப்போது கட்ச் தீபகற்பத்தின் ஒரு பாதியை உரிமை கோரிய பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே 1965 ஆம் ஆண்டு போர் மூண்டது.

போர்க்களத்தில் நின்று லால் பகதூர் சாஸ்திரி அளித்த உத்வேகத்தால் இந்திய எல்லைகளுக்கு ஆயுதங்களுடன் நுழைந்த பாகிஸ்தான் வீரர்களை இந்திய வீரர்கள் துணிச்சலுடன் எதிர்கொண்டு அவர்களது முயற்சியை முறியடித்தனர்.

லால் பகதூர் சாஸ்திரியின் துணிச்சலை நாடு முழுவதும் பாராட்டி வந்த நிலையில் 1966-ம் ஆண்டு அப்போதைய சோவியத் ஒன்றியத்தில் இருந்த தாஷ்கண்ட் உச்சி மாநாட்டில் பங்கேற்றபோது லால் பகதூர் சாஸ்திரி மரணம் அடைந்தார். அவர் மரணத்திற்கான காரணம் தற்போது வரை சர்ச்சையாக உள்ளது.

Next Story