அபராத தொகையை உயர்த்திய பிறகு டெல்லியில் போக்குவரத்து விதிமீறல்கள் குறைந்துள்ளன - போலீஸ்


அபராத தொகையை உயர்த்திய பிறகு டெல்லியில் போக்குவரத்து விதிமீறல்கள் குறைந்துள்ளன - போலீஸ்
x
தினத்தந்தி 2 Oct 2019 5:35 PM IST (Updated: 2 Oct 2019 5:35 PM IST)
t-max-icont-min-icon

அபராத தொகையை உயர்த்திய பிறகு டெல்லியில் போக்குவரத்து விதிமீறல்கள் குறைந்துள்ளதாக டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

மோட்டார் வாகன திருத்த சட்டம் செப்டம்பர் 1 ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. புதிய வாகனச்சட்டத்தின் கீழ் விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு கடுமையான அபராதங்கள் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.  புதிய சட்ட திருத்தத்தின்படி, லைசன்ஸ் இல்லாமல் ஓட்டினால் அபராதம் ரூ. 500-லிருந்து ரூ. 5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

 அதிக வேகமாக ஓட்டினால் அபராதம் ரூ. 400லிருந்து ரூபாய் ஆயிரமாகவும், ஆபத்தான முறையில் வண்டி ஓட்டினால் அபராதம் ரூ. 1,000லிருந்து ரூ. 5 ஆயிரமாகவும், மதுபானம் அருந்தி விட்டு ஓட்டினால் ரூ. 2 ஆயிரத்திலிருந்து ரூ. 10 ஆயிரமாகவும் அபராதம் உயர்த்தப்பட்டுள்ளது.   அபராத தொகை மிக அதிகமாக இருப்பதாக மராட்டியம், குஜராத், மேற்கு வங்காளம் போன்ற சில மாநிலங்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளன. 

இந்த நிலையில், அபராத தொகையை  உயர்த்திய பிறகு போக்குவரத்து விதி மீறல் டெல்லியில் 66 சதவீதம் குறைந்து இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த 2018 செப்டம்பர் மாதம்  மொத்தம் 5 லட்சத்து 24 ஆயிரம் விதி மீறல்கள் நடந்துள்ளன. ஆனால் கடந்த மாதம் இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 73 ஆயிரமாக குறைந்துள்ளது. அபராதத்தை அதிரடியாக உயர்த்தியதுதான் இந்த விதிமீறல் குறைவுக்கு முக்கிய காரணம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியைப் போன்றே நாட்டின் பல மாநிலங்களிலும் போக்குவரத்து விதி மீறல்கள் கடந்த மாதங்களை விட செப்டம்பரில் கணிசமான அளவுக்கு குறைந்திருக்கிறது. 

Next Story