காந்தி ஜெயந்தி விடுமுறை: ”வாங்கி வைத்த மதுபாட்டிலை காணவில்லை” தந்தையை நிர்வாணமாக்கி தாக்கிய மகன்
காந்தி ஜெயந்தி விடுமுறைக்கு வாங்கி வைத்த மதுபாட்டிலை காணவில்லை என தந்தையை அடித்து உதைத்த மகன் வைரலான வீடியோவால் தலைமறைவானார்.
திருவனந்தபுரம்,
மலையாள ஜிமிக்கி கம்மல் பாடல் தமிழகத்தின் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாகியது. பாடல் வரியில் "என்னுடைய அம்மாவின் ஜிமிக்கி கம்மலை அப்பா திருடிக் கொண்டு போய் அதை விற்று சாராயம் வாங்கிக் கொண்டு வந்தார். இதனால் கோபமடைந்த அம்மா அந்த சாராய பாட்டிலை எடுத்து தானே முழுவதையும் குடித்துத் தீர்த்து விட்டார்" என்று வரும்.
அதுபோல் கேரளாவில் காந்தி ஜெயந்தி விடுமுறைக்கு மகன் வாங்கி வைத்த மதுபாட்டிலை தந்தை குடித்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த மகன் தாயார் கண் முன் தந்தையை நிர்வாணமாக்கி அடித்து உதைத்த வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது.
கேரளாவில் அரசு அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வாட்ஸ்-அப்பில் கடந்த சில நாட்களாக வாலிபர் ஒருவர், அவரது தந்தையை சரமாரியாக தாக்கும் காட்சிகள் வைரலாக பரவியது.
“எனக்குத் தெரியாது..நான் அதை எடுக்கவில்லை ” என்று பயந்துபோன ஒரு மனிதன் தனது மகனிடம் மன்றாடுவதைக் அந்த வீடியோவில் காணலாம். மகன் வெறித்தனத்தில் தனது தந்தையை அடிப்பதை வீடியோவில் காண முடிந்தது.
காந்தி ஜெயந்தி அன்று மதுபாட்டில் கிடைக்காது என்பதற்காக மகன் வாங்கி வைத்திருந்த ஒரு மதுபாட்டிலைக் காணாமல் போனதால் மகன் கோபமடைந்து தந்தையை தாக்கியதாக கூறப்படுகிறது. அந்த நபர் தனது தந்தையை தனது தாயின் முன் கொடூரமாக அடித்து நொறுக்கும் வீடியோ, பேஸ்புக்கில் வைரலாகி விட்டது.
வீடியோ காட்சியில் தந்தையை தாக்கிய மகனை, தாயாரும், பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்களும் சமரசம் செய்ய முயல்வதும், அவர் சமரசத்தை ஏற்க மறுத்து தந்தையை மீண்டும், மீண்டும் காலால் எட்டி உதைக்கும் காட்சிகளும் பதிவாகி இருந்தது.
பின்னர் தந்தை மகனிடம் மன்னிப்பு கேட்பதோடு, காட்சி முடிவடையும். இந்த சம்பவம் காந்தி ஜெயந்திக்கு ஒரு நாள் முன்பு அக்டோபர் 1 ஆம் தேதி நடந்தது. இதை கண்ட, அரசு அதிகாரிகள் இக்காட்சி பற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும் படி போலீசாருக்கு உத்தரவிட்டனர்.
வாட்ஸ்-அப் காட்சியில் காணப்படும் வாலிபரும், அவரது தந்தையும் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என போலீசார் விசாரித்தனர். இதில் அவர்கள் மாவேலிக்கரையை சேர்ந்த ரத்தீஷ் (வயது29), அவரது தந்தை என்பதும் தெரிய வந்தது.
ரத்தீசுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. அவரது தந்தையும், குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். சம்பவத்தன்று ரத்தீஷ், மது பாட்டிலை வாங்கி வந்து வீட்டில் மறைத்து வைத்து உள்ளார்.
இதை ரத்தீசின் தந்தை பார்த்துள்ளார். ரத்தீஷ் வெளியேச் சென்றதும், அவரது தந்தை, மது பாட்டிலை எடுத்து குடித்துவிட்டார். திரும்பி வந்த மகன் காலி மதுபாட்டிலை பார்த்ததும், ஆத்திரம் அடைந்துள்ளார்.
மதுவை குடித்தது தந்தை என்று தெரிந்த பின்பும், ஆத்திரம் அடங்காமல் வீட்டிற்கு வெளியே நின்ற தந்தையை சரமாரியாக அடித்து, உதைத்துள்ளார். இதை அக்கம் பக்கத்தில் இருந்த சிலர் செல்போனில் பதிவு செய்து அதனை சமூக வலைதளத்தில் பதிவேற்றி உள்ளனர்.
குராதிகாட் காவல் நிலைய அதிகாரிகளின் விசாரணையில் ரத்தீஷ் ஒரு குடிகாரன், பெரும்பாலும் வீட்டில் பிரச்சினையை உருவாக்குவான். இந்த சம்பவத்தின் வீடியோ ஆரம்பத்தில் பசுமை கேரளா என்ற பேஸ்புக் குழுவில் அக்டோபர் 1 ஆம் தேதி வெளியிடப்பட்டது. பின்னர் வீடியோ அந்த பக்கத்திலிருந்து அகற்றப்பட்டாலும், அதற்குள் அது வைரலாகி உள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து குரதிகாட் போலீசார் ரத்தீஷ் மீது 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு ரத்தீஷ் தலைமறைவாகி விட்டார். அவரது மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது, அவரும் வீட்டில் இல்லை. அந்த வீடியோவை ஆதாரமாக நீதிமன்றத்தில் முன்வைக்க முடிவு செய்துள்ளோம்” என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.
Related Tags :
Next Story