பாரதீய ஜனதாவின் உதட்டில் மகாத்மா காந்தியும் இதயத்தில் கோட்சேவும் உள்ளனர் -அசாசுதீன் ஓவைசி
பாரதீய ஜனதா கட்சியை பொறுத்தவரை அவர்களின் உதட்டில் மட்டும் மகாத்மா காந்திக்கு இடம் இருக்கிறது. இதயத்தில் கோட்சேவுக்கு தான் இடம் அளிக்கப்பட்டுள்ளது என அசாசுதீன் ஓவைசி கூறினார்.
அவுரங்காபாத்,
மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிம் கட்சி தலைவர் அசாசுதீன் ஓவைசி சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது ஒரு கூட்டத்தில் பேசும்போது அசாசுதீன் ஓவைசி கூறியதாவது;-
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இந்த நேரத்தில் பாரதீய ஜனதா கட்சி மகாத்மா காந்தி பெயரில் கடை விரித்து மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறது.
ஆனால் உண்மையில் பாரதீய ஜனதா கட்சிக்கு காந்தியை கொன்ற கோட்சே தான் ஹீரோவாக தெரிகிறார். அவரை போற்றி மகிழ்கிறார்கள். பாரதீய ஜனதா கட்சியை பொறுத்தவரை அவர்களின் உதட்டில் மட்டும் மகாத்மா காந்திக்கு இடம் இருக்கிறது. இதயத்தில் கோட்சேவுக்கு தான் இடம் அளிக்கப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தியை கோட்சே 3 துப்பாக்கி குண்டுகளால் கொன்றார். ஆனால் நவீனகால கோட்சேக்கள் காந்தியின் இந்தியாவை தினமும் கொன்று வருகின்றனர். விவசாயிகளை காந்தி மிகவும் நேசித்தார். ஆனால் இப்போதுள்ள அரசு விவசாயிகளை கைவிட்டு விட்டது. இதனால் அவர்கள் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
ஐதராபாத் நிஜாம் லண்டன் வங்கியில் டெபாசிட் செய்திருந்த பணம் இன்று ரூ.450 கோடியாக உயர்ந்துள்ளது. அதை இந்திய அரசுக்கு வழங்க வேண்டும் என்று லண்டன் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன் ஒரு பகுதி நிஜாமின் குடும்பத்திற்கு போக மீதி பணம் அரசின் கஜானாவிற்கு வரும். அதை குடிநீர் திட்டத்திற்கு அரசு பயன்படுத்த வேண்டும் என்று கூறினார்.
Related Tags :
Next Story