இயல்பு நிலைக்கு திரும்பும் காஷ்மீர்; காலை வேளைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் இயல்பு நிலை ஓரளவு திரும்பியுள்ளதற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன.
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. அம்மாநிலம் ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக அரசியல் தலைவர்கள் போராட்டங்களில் ஈடுபடலாம் என்பதால் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
வதந்திகள் பரப்பப்படும் என்பதால் மொபைல், இண்டர்நெட் சேவை முடக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்ட போதிலும், மாணவர்கள் வருகை இல்லாததால், பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டுள்ளன. இந்த சூழலில், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் இயல்பு நிலை திரும்புவதற்கான அடையாளங்கள் தென்படுகின்றன.
இன்று காலை ஸ்ரீநகர் உள்பட முக்கிய நகரங்களில் சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. பெரும்பாலான கடைகளும் திறந்து இருந்ததால், மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு படையினரும் அதிக அளவில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
காஷ்மீரின் ஹந்த்வாரா மற்றும் குப்வாரா ஆகிய பகுதிகளை தவிர்த்து ஏனைய இடங்களில், மொபைல் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. இணையதள சேவைகளும் பள்ளத்தாக்கு பகுதிகள் முழுவதும் முடக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர வேறு எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
Related Tags :
Next Story