மும்பையில் தேர்தல் பறக்கும் படையினரின் கேமராவை உடைத்த கனடா மாடல் அழகி கைது


மும்பையில் தேர்தல் பறக்கும் படையினரின் கேமராவை உடைத்த கனடா மாடல் அழகி கைது
x
தினத்தந்தி 4 Oct 2019 2:00 AM IST (Updated: 4 Oct 2019 12:53 AM IST)
t-max-icont-min-icon

காரில் சோதனை நடத்தியதால் ஆத்திரமடைந்து தேர்தல் பறக்கும் படையினரின் கேமராவை உடைத்த கனடா மாடல் அழகி கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பை, 

காரில் சோதனை நடத்தியதால் ஆத்திரமடைந்து தேர்தல் பறக்கும் படையினரின் கேமராவை உடைத்த கனடா மாடல் அழகி கைது செய்யப்பட்டுள்ளார்.

கேமராவை உடைத்தார்

மராட்டியத்தில் வருகிற 21-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் பணம் வினியோகம் செய்வதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் மும்பை அந்தேரி, வீர்தேசாய் ரோட்டில் அதிகாலை 2 மணியளவில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்தநிலையில் அந்த வழியாக வந்த காரை பறக்கும் படையினர் மறித்து சோதனை நடத்தினர். அப்போது, காரில் இருந்த பெண் அவரது காரை சோதனை செய்யக்கூடாது என பறக்கும் படையினரிடம் தகராறில் ஈடுபட்டார். மேலும் காரை வீடியோ எடுக்கக்கூடாது எனவும் கூறினார்.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த பெண், பறக்கும் படையினரின் கேமராவை பறித்து கீழே போட்டு உடைத்தார். மேலும் அதில் இருந்த மெமரி கார்டையும் எடுத்துக்கொண்டார்.

கனடா மாடல் அழகி

இந்தநிலையில் தகவல் அறிந்து சென்ற அம்போலி போலீசார் பறக்கும் படையினரின் கேமராவை உடைத்த பெண்ணை அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில், அவர் மும்பை பவாய் பகுதியில் வசித்து வரும் கனடாவை சேர்ந்த மாடல் அழகி ஷீனா லகானி (வயது 33) என்பது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து அம்போலி போலீஸ்நிலைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மாடல் அழகி ஷீனா லகானி, நான் கனடா பெண், மராட்டிய தேர்தலுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. எனது காரில் ஏன் சோதனை நடத்த வேண்டும் என கூறி பறக்கும் படையினரிடம் தகராறில் ஈடுபட்டு கேமராவை உடைத்து உள்ளார். சம்பவத்தின் போது அவர் மது அருந்தவில்லை என மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. எனினும் அவர் போதைப்பொருள் பயன்படுத்தி இருக்கலாம் என சந்தேகிக்கிறோம் என்றார்.

Next Story