தேர்தல் முடிவில் மாற்றம் வருமா?- ராதாபுரம் தொகுதி ஓட்டுகள் இன்று மறு எண்ணிக்கை


தேர்தல் முடிவில் மாற்றம் வருமா?- ராதாபுரம் தொகுதி ஓட்டுகள் இன்று மறு எண்ணிக்கை
x
தினத்தந்தி 4 Oct 2019 7:40 AM IST (Updated: 4 Oct 2019 7:40 AM IST)
t-max-icont-min-icon

ராதாபுரம் தொகுதியில் பதிவான ஓட்டுகள் இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் எண்ணப்படுகிறது.

சென்ன,

தமிழக சட்டசபை தேர்தல் கடந்த 2016-ம் ஆண்டு நடந்தபோது, நெல்லை மாவட்டம், ராதாபுரம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் வக்கீல் ஐ.எஸ்.இன்பதுரை, தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு உள்ளிட்டோர் போட்டியிட்டனர். இதில், அ.தி.மு.க. வேட்பாளர் ஐ.எஸ்.இன்பதுரை 49 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அப்பாவு தேர்தல் வழக்கை தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்தார்.

இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், கடந்த 1-ந்தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ‘ராதாபுரம் தொகுதியில் பதிவான 203 தபால் ஓட்டுகளை எண்ணவில்லை. 19, 20, 21 ஆகிய சுற்றுகள் எண்ணும்போது எங்களை அனுமதிக்கவில்லை என்று மனுதாரர் அப்பாவு தரப்பில் வாதிடப்பட்டது.

எனவே, இந்த 203 தபால் ஓட்டுகளையும், 19, 20, 21 ஆகிய சுற்றுகளையும் மீண்டும் எண்ண வேண்டும். 4-ந்தேதி (இன்று) நடைபெறும் இந்த மறு ஓட்டு எண்ணிக்கையை மேற்பார்வையிட ஒரு பதிவாளரை, ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் நியமிக்கவேண்டும். இதற்காக நெல்லை மாவட்டத்தில் இருந்து தபால் ஓட்டுகள் மற்றும் 3 சுற்றுகள் பதிவான ஓட்டு எந்திரங்களை ஐகோர்ட்டு தலைமை பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த ஓட்டு எண்ணிக்கைக்கு உதவி செய்ய தேர்தல் ஆணையத்தின் சார்பில் தகுந்த அதிகாரிகளை நியமிக்கவேண்டும்’ என்று உத்தரவிட்டார்.


இதையடுத்து, இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய போவதாகவும், அதனால், இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் எம்.எல்.ஏ. ஐ.எஸ்.இன்பதுரை சார்பில் ஆஜரான வக்கீல் முறையிட்டார். இதுகுறித்து மனுவும் உடனே தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஐ.எஸ்.இன்பதுரை சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் டி.வி.ராமானுஜம், ‘சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து இருப்பதாகவும் எனவே, மறு ஓட்டு எண்ணிக்கை தொடர்பாக தாங்கள் பிறப்பித்த உத்தரவுக்கு 3 வாரத்துக்கு தடை விதிக்கவேண்டும். மறு ஓட்டு எண்ணிக்கை நடவடிக்கையையும் நிறுத்தி வைக்கவேண்டும்’ என்று வாதிட்டார்.


அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘சுப்ரீம் கோர்ட்டு என்ன உத்தரவு பிறப்பிக்கிறதோ, அதை நான் (நீதிபதி) ஏற்றுக்கொள்வேன். இப்போது ஓட்டுகளை எண்ணுவதால், தங்கள் கட்சிக்காரருக்கு என்ன பாதிப்பு வந்துவிட போகிறது?’ என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு மூத்த வக்கீல், ‘203 தபால் ஓட்டுகளுக்கு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ‘கெஜட்டெட்’ அதிகாரி என்ற பெயரில் சான்றொப்பம் வழங்கியுள்ளார். அவர் கெஜட்டெட் அதிகாரி இல்லை என்று கூறி அந்த ஓட்டுகளை தேர்தல் அதிகாரிகள் எண்ணாமல் நிராகரித்து விட்டனர். ஆனால், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ‘கெஜட்டெட் அதிகாரி’ தான் என்று முடிவு செய்து, எண்ணாமல் விடப்பட்ட 203 தபால் ஓட்டுகளை எண்ணவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளீர்கள். ஒருவேளை இந்த உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு ரத்துசெய்தால், ஓட்டுகளை மறுபடியும் எண்ணக்கூடாது என்று கோரிக்கை விடுக்க இன்பதுரைக்கு முழு உரிமை உள்ளது’ என்று வாதிட்டார்.


இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பாவு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் டி.ஆர்.ராஜகோபால் வாதிட்டார். அப்போது, ‘தேர்தல் வழக்கில் ஐகோர்ட்டு பிறப்பிக்கும் இடைக்கால உத்தரவுகளை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய முடியாது என்று கடந்த 2014-ம் ஆண்டே சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. எனவே, ஐகோர்ட்டு தற்போது பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய முடியாது. இந்த தேர்தல் வழக்கின் இறுதி தீர்ப்பை எதிர்த்துத்தான் மேல்முறையீடு செய்ய முடியும். நீங்கள் பிறப்பித்த உத்தரவுக்கு நீங்களே தடை விதிக்க முடியாது. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்யவேண்டும்’ என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், ‘மறு ஓட்டு எண்ணிக்கை நடத்த பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்தும், இதுதொடர்பாக இன்பதுரை சார்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தும்’ உத்தரவிட்டார்.


‘ஏற்கனவே, கடந்த 1-ந்தேதி பிறப்பித்த உத்தரவின்படி, இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11.30 மணிக்கு மறு ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்’ என்றும் நீதிபதி தன் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

ஐகோர்ட்டு ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின்படி, ராதாபுரம் தொகுதியில் பதிவான தபால் ஓட்டுகளையும், 3 சுற்று ஓட்டுகளையும் ஐகோர்ட்டு பதிவாளர் முன்னிலையில் எண்ணும் பணியில் ஈடுபட நெல்லை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பால்பாண்டி உள்பட 24 பேரை நியமித்து நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு ஐகோர்ட்டு தலைமை பதிவாளரிடம் சி.குமரப்பனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையே, நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா, தேர்தல் நடத்தும் அலுவலர் பால்பாண்டி, ராதாபுரம் தாசில்தார் செல்வம் ஆகியோர் முன்னிலையில் ராதாபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த தபால் ஓட்டுகள் கொண்ட இரும்பு பெட்டி இருந்த அறை நேற்று திறக்கப்பட்டது.

பின்னர் தபால் ஓட்டு பெட்டியை போலீஸ் வேனில் ஏற்றி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள நெல்லையை அடுத்த ராமையன்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு கொண்டு வந்தனர். அங்கு ராதாபுரம் தொகுதியில் 19, 20, 21 ஆகிய சுற்றுகளில் பதிவான வாக்குகள் கொண்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சேகரிக்கப்பட்டன.

தபால் ஓட்டு பெட்டியுடன், கடைசி 3 சுற்றுகளில் பதிவான வாக்குகள் கொண்ட 36 வாக்குப்பதிவு எந்திரங்களையும் ஏற்றிய போலீஸ் வேன் நேற்று மாலை நெல்லையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது. வேனுக்கு முன்னும், பின்னும் வேன்களில் ஆயுதம் ஏந்திய போலீசார் வந்தனர். ராதாபுரம் தொகுதி வாக்குகள் மீண்டும் எண்ணப்படுவதால் அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. தேர்தல் முடிவில் மாற்றம் வருமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இதற்கிடையே சென்னை ஐகோர்ட்டு மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட்டு இருப்பதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ. இன்பதுரை சார்பில் மூத்த வக்கீல் ராஜூ ராமச்சந்திரன் இந்த வழக்கை தாக்கல் செய்து உள்ளார்.

இதன் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அருண் மிஷ்ரா முன்பு இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.


Next Story