இந்தியாவின் மிகப்பெரிய பலமே பொருளாதாரம்; அதனையே பிரதமர் மோடி சிதைத்து விட்டார் - ராகுல் காந்தி தாக்கு


இந்தியாவின் மிகப்பெரிய பலமே பொருளாதாரம்; அதனையே பிரதமர் மோடி சிதைத்து விட்டார் - ராகுல் காந்தி தாக்கு
x
தினத்தந்தி 4 Oct 2019 3:55 PM IST (Updated: 4 Oct 2019 3:55 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவின் மிகப்பெரிய பலமே பொருளாதாரம். அதனையே பிரதமர் மோடியும், பாஜகவும் சிதைத்து விட்டனர் என ராகுல்காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.

வயநாடு,

வயநாடு - மைசூரு இடையே தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த பாதை கர்நாடக மாநிலம் பந்திப்பூர் வனப்பகுதி வழியாக செல்கிறது. வயநாட்டில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு செல்ல இது தான் முக்கியமான பாதையாகும். இந்த நிலையில் இரவு நேரங்களில் இந்த வழியாக வாகனங்கள் செல்வதால் வன விலங்குகள் அடிபட்டு இறப்பதாக கூறி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக அரசு இரவில் இந்த சாலையில் வாகன போக்குவரத்துக்கு தடை விதித்தது. இதனால் கடந்த 10 ஆண்டுகளாக இந்த பாதையில் இரவு நேரங்களில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வந்தது. நெடுஞ்சாலை 766 ல் பந்திப்பூர் புலிகள் காப்பகம் உள்ளதால் தடை விதிக்கப்பட்டது.  இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக  வயநாடு தொகுதிக்கு உட்பட்ட சுல்தான் பேதரி நகரை சேர்ந்த இளைஞர்கள் கடந்த 10 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. இதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் வயநாடு எம்.பி.யான ராகுல்காந்தி, இன்றைய போராட்டத்தில் கலந்து கொண்டு  ஆதரவு தெரிவித்தார். 

அப்போது பேசிய ராகுல்காந்தி, தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் பயணிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்பதில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு உள்ளன.  இந்த தடையால் கேரளா- கர்நாடகா ஆகிய இரு மாநில மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எங்கள் சட்ட நிபுணர்கள் குழுவுடன் இது பற்றி பேசி உள்ளேன். விரைவில் இதற்கு சட்ட ரீதியாக தீர்வு காணப்படும். இது தொடர்பாக பாராளுமன்றத்திலும் குரல் எழுப்புவேன்.

இந்தியாவின் மிகப்பெரிய பலமே அதன் பொருளாதாரம் தான். அந்த பொருளாதாரத்தை சிதைத்தது மோடியும், பாஜகவும் தான். எதற்காக இதை செய்தார் என்பதற்கு அவர் பதிலளித்தே தீர வேண்டும்.

நாட்டில் எதற்காக மிகப் பெரிய அளவில் வேலையில்லாத நிலையை உருவாக்கினார்? இதை நடத்துவதால் மோடிக்கு என்ன கிடைக்கிறது என்பது தான்  விவாதமாக உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story