காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் ஒருவர் சாவு


காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் ஒருவர் சாவு
x
தினத்தந்தி 6 Oct 2019 12:37 AM IST (Updated: 6 Oct 2019 12:37 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்.

ஸ்ரீநகர்,

காஷ்மீர் எல்லையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி அத்துமீறிய தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது. இதில் அவ்வப்போது உயிரிழப்புகளும் நிகழ்ந்து வருகின்றன.

அந்தவகையில் காஷ்மீரின் வடக்கு மாநிலங்களில் ஒன்றான பாரமுல்லாவின் உரி பகுதியில் நேற்று முன்தினம் பாகிஸ்தான் ராணுவம் சிறிய ரக பீரங்கிகளால் திடீர் தாக்குதலை தொடுத்தது. இதில் கமல்கோட் பகுதியில் வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்த உள்ளூர் சுமைதூக்கும் தொழிலாளர் குழுவினர் மீது பீரங்கி குண்டு ஒன்று விழுந்து வெடித்தது.

இதில் 2 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர்களில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த கண்மூடித்தனமான தாக்குதலுக்கு இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்தனர். இதில் பாகிஸ்தான் தரப்பில் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை. இந்த தாக்குதல் சம்பவங்களால் எல்லையில் பரபரப்பு நிலவி வருகிறது.


Next Story