எங்கள் மீது நம்பிக்கை கொண்டு ஆதரவு வழங்கும் நாட்டுக்கு நாங்கள் நன்றியுடன் இருப்போம்; ஆர்.கே.எஸ். பதவுரியா உரை
எங்கள் மீது நம்பிக்கை கொண்டு ஆதரவு வழங்கும் நாட்டுக்கு நன்றியுடன் நாங்கள் இருப்போம் என இந்திய விமான படை தலைமை தளபதி ஆர்.கே. சிங் பதவுரியா கூறினார்.
புதுடெல்லி,
இந்திய விமான படை கடந்த 1932ம் ஆண்டு அமைக்கப்பட்டது. புதுடெல்லியில் உள்ள காஜியாபாத் அருகே ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 8ந்தேதி இந்திய விமான படை தினம் கொண்டாடப்படுகிறது. இதன்படி, இந்திய விமான படையின் 87வது ஆண்டு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு புதுடெல்லியில் உள்ள தேசிய போர் நினைவு சின்னத்தில் முப்படைகளின் தளபதிகள் இன்று மரியாதை செலுத்தினர். இதில், ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத், இந்திய விமான படை தலைமை தளபதி ஆர்.கே. சிங் பதவுரியா மற்றும் இந்திய கடற்படை தலைமை தளபதி கரம்பீர் சிங் ஆகிய முப்படைகளின் தளபதிகள் இன்று மலர்வளையம் வைத்து வணக்கம் தெரிவித்து மரியாதை செலுத்தினர்.
இதன்பின் விமான படையின் அணிவகுப்பு நடைபெறும் என்றும் இதில், விமான படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் மிக் பைசன் ரக விமானத்தில் பறந்து சாகசத்தில் ஈடுபடுவார் என்றும் தகவல் வெளியானது.
இந்திய விமான படை தினத்தினை முன்னிட்டு விமான படை தலைமை தளபதி ஆர்.கே. சிங் பதவுரியா இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசும்பொழுது, எங்கள் மீது நம்பிக்கை கொண்டு ஆதரவு வழங்கும் நாட்டுக்கு நன்றியுடன் நாங்கள் இருப்போம்.
அனைத்து விமான படை வீரர்களின் சார்பில் தூய்மையான உறுதியுடன், நம்முடைய வான்வெளியின் இறையாண்மையை பாதுகாப்பதுடன், நம்முடைய தேச நலனை காக்கும் பணியில் எல்லா நிலைகளிலும் செயலாற்றுவோம் என நாட்டுக்கு நான் உறுதி அளிக்கிறேன் என பேசினார்.
இதன்பின் விமான படையின் சாகச நிகழ்ச்சிகள் நடந்தன. இதில், காஜியாபாத் நகரில் ஹிண்டன் விமான படை தளத்தில் 3 சினூக் ரக போக்குவரத்து ஹெலிகாப்டர்கள் சாகசத்தில் ஈடுபட்டன.
இதேபோன்று பாலகோட் தாக்குதலில் ஈடுபட்ட இந்திய விமான படை அதிகாரிகள், மூன்று மிரேஜ் 2000 ரக விமானங்கள் மற்றும் இரண்டு சூ-30எம்.கே.ஐ. ரக போர் விமானங்களில் பறந்து சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story