ராகுல்காந்திக்கு சிறப்பு பாதுகாப்பு படை வாபஸ்?


ராகுல்காந்திக்கு சிறப்பு பாதுகாப்பு படை வாபஸ்?
x
தினத்தந்தி 8 Oct 2019 4:35 PM IST (Updated: 8 Oct 2019 4:35 PM IST)
t-max-icont-min-icon

ராகுல் காந்திக்கு சிறப்பு பாதுகாப்பு படையை வாபஸ் பெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி, 

நாட்டின் முக்கிய தலைவர்கள்  மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய அரசின் சிறப்பு பாதுகாப்பு படை (எஸ்.பி.ஜி.) மூலம் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்டதை அடுத்து இந்த சிறப்பு பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டது.

தற்போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா ஆகியோருக்கு சிறப்பு பாதுகாப்பு படையின் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. முன்னாள்  பிரதமர் மன்மோகன்சிங்குக்கும் இதே பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. சமீபத்தில் இது வாபஸ் பெறப்பட்டது.

இப்போது ராகுல் காந்திக்கு சிறப்பு பாதுகாப்பு படையை வாபஸ் பெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ராகுல்காந்தி அடிக்கடி வெளிநாடுகளுக்கு ரகசியமாக சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். 

இப்போதுகூட அவர் கம்போடியா நாட்டுக்கு ரகசிய பயணம் மேற்கொண்டுள்ளார். இது சம்பந்தமாக மத்திய அரசு ராகுல்காந்திக்கு சில தகவல்களை அனுப்பி உள்ளதாக தெரிய வந்துள்ளது.

படையின் பாதுகாப்பின் கீழ் நீங்கள்  இருப்பதால் வெளிநாட்டு பயணத்தின் போது உங்களுடன் சிறப்பு படை இருக்க வேண்டும். அப்படி சிறப்பு படை தேவை இல்லை என்று கருதினால் உங்களுக்கு இந்தியாவில் வழங்கப்படும் சிறப்பு படையின் பாதுகாப்பு வாபஸ் பெறப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இது சம்பந்தமாக மத்திய அரசு தரப்பில் இருந்து எந்த தகவலையும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில்
ராகுல்காந்தியும் மத்திய அரசின் தகவல் குறித்து எந்த கருத்தையும் வெளியிடவில்லை. ஆனால், ராகுல்காந்திக்கு தகவல் அனுப்பப்பட்டு இருப்பதாக மத்திய அரசு அதிகாரிகள் வட்டாரங்கள் கூறுகின்றன.

காங்கிரஸ் கட்சி தரப்பிலும் இதுபற்றி தெளிவாக எதையும் சொல்லவில்லை. கட்சியின் செய்தி தொடர்பாளர் பிரணவ்ஜா கூறும்போது, மத்திய அரசிடம் இருந்து ராகுல்காந்திக்கு எந்த கடிதமும் அலுவல் ரீதியாக வந்ததாக எங்களுக்கு தெரியவில்லை. எனவே, இது சம்பந்தமாக பதில் சொல்ல முடியாது என்று கூறினார்.

தேசிய மாநாட்டு கட்சி தலைவர் மஜீத் மேமன் கூறும்போது, ராகுல் காந்தி வெளிநாட்டு பயணத்திலும் சிறப்பு படையினர் உடன் செல்ல வேண்டும் என்று சொல்வது அவருடைய தனிப்பட்ட அடிப்படை உரிமையையும், சுதந்திரத்தையும் பாதிக்கும் செயல் ஆகும். மேலும் அவருடைய பாதுகாப்பை அலட்சியப்படுத்தும் வகையில் மத்திய அரசின் செயல்பாடு இருக்கிறது என்று கூறினார்

Next Story