இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெண்களையும் மதிக்க வேண்டியது நமது பொறுப்பு ; தசரா விழாவில் பிரதமர் மோடி பேச்சு


இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெண்களையும் மதிக்க வேண்டியது நமது பொறுப்பு ; தசரா விழாவில் பிரதமர் மோடி பேச்சு
x
தினத்தந்தி 8 Oct 2019 8:39 PM IST (Updated: 8 Oct 2019 9:42 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெண்களையும் மதிக்க வேண்டியது நமது பொறுப்பு என தசரா விழாவில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

தசரா பண்டிகை நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையின் இறுதி நாளில் டெல்லி செங்கோட்டை அருகில் அமைந்துள்ள ராம்லீலா மைதானத்தில் ராவண வதம் நடைபெறும்.

இதையொட்டி அங்கு ராவணனை ராமர் வதம் செய்ததை நினைவூட்டும் வகையில், ராவணனின் உருவ பொம்மைக்கு தீவைத்து எரிப்பது வழக்கம். தீய சக்திகள் அழிந்து நாட்டுக்கு நன்மை கிடைக்கும் என்பதை வலியுறுத்தி இந்த நிகழ்வு நடைபெற்று வருகிறது.
 
அந்த வகையில், இந்த ஆண்டிற்கான தசரா பண்டிகையின் நிறைவு விழா இன்று டெல்லி துவாரகாவில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நடைபெற்றது.

அங்கு ராமர், லட்சுமணர், அனுமன் உருவங்களில் இருந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி திலகமிட்டார். அதன்பின்னர், அங்கு 80 முதல் 90 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட ராவணனின் உருவ பொம்மை தீ வைத்து எரிக்கப்பட்டது. அதன்பின் ராமர் பட்டாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

டெல்லி துவாரகாவில் ராம்லீலா மைதானத்தில் நடந்த தசரா கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசியதாவது:-

நமது நாட்டில்  சமூக வாழ்க்கையின் ஒரு அங்கமாக திருவிழாக்கள் உள்ளன. பண்டிகைகள் நம்மை ஒருங்கிணைக்கின்றன. ஆற்றல், உற்சாகம் மற்றும் புதிய கனவுகளை அவை உருவாக்குகின்றன.

இந்த விஜயதசமி நன்நாளில், மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினத்தை கொண்டாடும் வேளையில், என் நாட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். உணவை வீணாக்கக்கூடாது.  மின்சக்தி மற்றும் தண்ணீரை மிச்சப்படுத்த வேண்டும். அதனை அடைய நாம் கடுமையாக உழைக்க வேண்டும்.

பெண்களை நாம் உயர்வாக மதித்து வருகிறோம். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெண்களையும் மதிக்க வேண்டியது நமது பொறுப்பு. 'மான் கி பாத்' நிகழ்ச்சியின் போது நமது நாட்டின் மகள்களை 'லக்ஷ்மி' என்றே குறிப்பிட்டேன்.  வரும் தீபாவளியில் அவர்களின் சாதனைகளை கொண்டாடுவோம். 

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story