ரூ.59 ஆயிரம் கோடி ஒப்பந்தம் பிரான்சில் தயாரான அதிநவீன ரபேல் போர் விமானம் ஒப்படைப்பு ராஜ்நாத் சிங் பெற்றுக்கொண்டார்


ரூ.59 ஆயிரம் கோடி ஒப்பந்தம் பிரான்சில் தயாரான அதிநவீன ரபேல் போர் விமானம் ஒப்படைப்பு ராஜ்நாத் சிங் பெற்றுக்கொண்டார்
x
தினத்தந்தி 9 Oct 2019 12:15 AM GMT (Updated: 8 Oct 2019 11:13 PM GMT)

பிரான்சில் தயாரான அதிநவீன ரபேல் போர் விமானம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதை மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பெற்றுக்கொண்டார்.

பாரீஸ்,

இந்திய விமானப்படையை பலப் படுத்துவற்காக, ரூ.59 ஆயிரம் கோடி செலவில் அதிநவீனமான 36 ரபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்தது.

இதற்காக பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்துடன் 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது.

36 விமானங்களில் முதல் விமானத்தை முறைப்படி பெறுவதற்காக ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், பிரான்சுக்கு 3 நாட்கள் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

6-ந் தேதி டெல்லியில் இருந்து புறப்பட்ட அவர் நேற்று முன்தினம் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் போய்ச் சேர்ந்தார். இதையொட்டி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “பிரான்சில் இருப்பதில் மகிழ்ச்சி. இந்த பெரிய நாடு, இந்தியாவின் முக்கியமான பாதுகாப்பு கூட்டாளி நாடு ஆகும். எங்கள் சிறப்பு உறவு, முறையான உறவுகளின் எல்லைக்கு அப்பாற்பட்டது. எனது பிரான்ஸ் வருகை, இரு நாடுகளுக்கும் இடையேயான தற்போதைய பாதுகாப்பு கூட்டு உறவை மேலும் விரிவுபடுத்தும் நோக்கத்தை கொண்டுள்ளது” என குறிப்பிட்டார்.

ராஜ்நாத் சிங், பிரான்ஸ் அதிபர் மேக்ரானை பாரீஸ் எலிசி அரண்மனையில் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 35 நிமிடங்கள் நீடித்தது.

இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு உறவினை மேலும் தீவிரப்படுத்துவதற்கும், ‘மேக் இன் இந்தியா’ என்னும் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்துக்கு ஆதரவு அளிப்பதற்கும் பிரான்ஸ் அதிபர் மேக்ரானுக்கு ராஜ்நாத் சிங் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஜாக்கிஸ் சிராக் மறைவுக்கு இந்திய அரசின் சார்பில் ராஜ்நாத் சிங், மேக்ரானிடம் அனுதாபம் தெரிவித்தார்.

மேக்ரானுடனான சந்திப்பு மிகச்சிறப்பான முறையில் அமைந்தது என்றும், பரந்த அளவில் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினோம் என்றும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.

ராஜ்நாத் சிங், மேக்ரான் சந்திப்பு தொடர்பாக இந்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டது.

அந்த அறிக்கையில், “பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் நடத்திய சந்திப்பு, இந்தியா, பிரான்ஸ் இரு தரப்பு பாதுகாப்புத்துறை கூட்டின் ஆழத்தை எடுத்துக்காட்டியது. சமீப காலமாக இந்த கூட்டு வலுப்பெற்றுள்ளது. இந்த இரு தரப்பு உறவை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்செல்வதற்கு இரு தலைவர்களும் முடிவு எடுத்தனர்” என கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து பிரான்ஸ் ஆயுத படைகளின் தலைவர் புளோரன்ஸ் பார்லியையும் ராஜ்நாத் சிங் சந்தித்து பேசினார். அப்போது அதிபரின் பாதுகாப்பு ஆலோசகர் அட்மிரல் பெர்னார்டு ரோஜலும் உடனிருந்தார்.

இந்த சந்திப்புகளை தொடர்ந்து ரபேல் போர் விமானத்தை பெற்றுக்கொள்வதற்காக ராஜ்நாத் சிங், துறைமுக நகரான பார்டியாக்ஸ் சென்றார்.

அங்கிருந்தவாறு, இந்திய விமான படையின் 87-வது ஆண்டு தினத்தையொட்டி, அவர் இந்திய விமான படையினருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் தனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.

அதையடுத்து, முதலாவது ரபேல் போர் விமானம், ராஜ்நாத் சிங்கிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. அவர் பெற்றுக்கொண்டு, ரிப்பன் வெட்டினார். ஆயுத பூஜை செய்தார். விமானத்தின் முன் இந்திய கலாசாரப்படி தேங்காய் உடைக்கப்பட்டது.

பின்னர், ரபேல் போர் விமானத்தில் ராஜ்நாத் சிங் உற்சாகமாக பறந்து பார்த்தார்.

ரபேல் போர் விமானம், இரட்டை என்ஜின் கொண்ட ஜெட் போர் விமானம் ஆகும். விமானம்தாங்கி போர் கப்பலில் இருந்தும், கரையோர தளத்தில் இருந்தும் இயங்கும் ஆற்றல் வாய்ந்தது. இது முழுமையான பல்துறை விமானம் ஆகும்.

4 விமானங்கள் அடங்கிய ரபேல் போர் விமானங்களின் முதல் அணி, அடுத்த ஆண்டு மே மாதம் இந்தியா வந்து சேரும். மொத்த எண்ணிக்கையான 36 விமானங்களும் இந்தியா வந்து சேர 2022-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் வரை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரபேல் போர் விமானம் ஒப்படைக்கப்பட்ட நிகழ்வு குறித்து ராஜ்நாத் சிங் குறிப்பிடுகையில், “இந்தியாவுக்கும், பிரான்சுக்கும் இடையேயான இரு தரப்பு பாதுகாப்பு துறை உறவை வலுப்படுத்துவதில் இது நீண்ட தூரம் செல்லும். இரு தரப்பு உறவில் இது புதிய மைல் கல் ஆகும்” என்று பெருமிதத்துடன் கூறினார்.

இந்திய விமானப்படை விமானிகளுக்கு பிரான்ஸ் பயிற்சி அளித்ததற்கு ராஜ்நாத் சிங் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

Next Story