1400 கிலோ மீட்டர் தூரம் பசுமை சுவர் அமைக்க மத்திய அரசு திட்டம்
குஜராத்தில் இருந்து டெல்லி-அரியானா எல்லை வரை 1,400 கி.மீ நீளமும் 5 கி.மீ அகலமும் கொண்ட பசுமை மண்டலத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
புதுடெல்லி,
பருவநிலை மாற்றம் மற்றும் பாலைவனமாக்கலை எதிர்த்து போராடும் விதமாக, குஜராத்திலிருந்து டெல்லி-ஹரியானா எல்லை வரை 1,400 கி.மீ நீளம் மற்றும் 5 கி.மீ அகலமுள்ள பசுமை மண்டலத்தை உருவாக்கும் ஒரு லட்சியத் திட்டம் குறித்து மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
கடந்த 2016 ஆம் ஆண்டு செயற்கைகோள் மூலம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இஸ்ரோ வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களின் மொத்த பரப்பளவில் 50%க்கும் அதிகமான நிலம் சீரழிந்து உள்ளதாகவும், பாலைவன நிலமாக மாறக்கூடிய நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தடுக்கும் விதமாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஆரம்ப நிலையில் உள்ள இந்த திட்டமானது, அதிகாரிகளின் ஒப்புதல் பெற்று செயல்படுத்தப்பட்டால் நிலம் சீரழிவு மற்றும் தார் பாலைவனம் கிழக்கு நோக்கி விரிவடைந்து வருவது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும்.
இந்த பசுமை மண்டலம், போர்பந்தரில் இருந்து பானிபட் வரை குஜராத், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் டெல்லி வரை பரந்து விரிந்துள்ள ஆரவல்லி மலைத்தொடரில் காடுகள் அழிப்பினால் சீரழிந்த நிலங்களை மீட்டெடுக்கவும், மேற்கு பாலைவனங்களில் இருந்து வரும் மணல் புயல்களை தடுக்கும் அரணாகவும் அமையும்.
ஆப்ரிக்காவில் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன், ‘மாபெரும் பசுமை சுவர்’ என்ற பெயரில் இதே போன்ற திட்டம் தொடங்கப்பட்டது. இருப்பினும் பல நாடுகள் ஒப்புதல் அளிக்க வேண்டி இருப்பதால் அத்திட்டம் இன்னும் முழுமை பெறவில்லை. இந்நிலையில் இந்தியாவில் சீரழியும் நிலையில் உள்ள 2.5 கோடி ஹெக்டேர் நிலத்தை மீட்டெடுக்க இந்த திட்டத்தை பயன்படுத்த இந்திய அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.
இருப்பினும் இந்த திட்டத்திற்கு உரிய அனுமதிகளை பெறுவதற்கு முன் இது குறித்த முழுமையான விவரங்களை அதிகாரிகள் வெளியிட மறுத்துள்ளனர். இதற்கான முறையான அனுமதிகளை பெற்ற பின்னர் தனியார் நில உரிமையாளர்களுடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story