சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் சென்னை மாமல்லபுரம் பயண விவரம்...


சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் சென்னை மாமல்லபுரம் பயண விவரம்...
x
தினத்தந்தி 9 Oct 2019 7:56 PM IST (Updated: 9 Oct 2019 7:56 PM IST)
t-max-icont-min-icon

சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் சென்னை மாமல்லபுரம் பயண விவரம் குறித்து கூறப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

மாமல்லபுரத்தில்  11,12-ம் தேதிகளில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்  இருவரும் சந்தித்து பேசுகிறார்கள்.  இரு தலைவர்களும் மாமல்லபுரத்தில் ஏராளமான சுற்றுலா இடங்களைப் பார்வையிட்டு, கலை நிகழ்ச்சிகளையும் கண்டு களிக்கிறார்கள்.

சென்னை மாமல்லபுரம் வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் மோடி இடையே அதிகாரபூர்வமற்ற சந்திப்பு நடைபெறுகிறது. இரு தலைவர்களுக்கு இடையிலான இந்தச் சந்திப்பில் எந்தவிதமான ஒப்பந்தங்களும், புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையொப்பமாகாது. நட்பை வலுப்படுத்திக்கொள்ளவும், இருநாட்டு மக்களுக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்தும் விதமாக சந்திப்பு நடத்தப்படுகிறது.

11-ம் தேதி  வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் சீன அதிபர்  ஜி ஜின்பிங்  2.05 மணிக்கு கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர விடுதிக்கு  தனது பிரத்யேக குண்டு துளைக்காத காரில் செல்கிறார்.  அவருடன் வரும் குழுவும், குண்டு துளைக்க முடியாத காரில் பயணிக்க உள்ளது. இதற்காக ஹாங்கி எல் 5 என்ற 4 சொகுசு கார்கள், தனி விமானம் மூலம் சென்னைகொண்டு வரப்பட்டன.   

ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் உணவை முடித்துக்கொண்டு,அங்கிருந்து 4 மணி அளவில் மாமல்லபுரத்திற்கு அவர் புறப்படுகிறார். பிரதமர் மோடியை மாமல்லபுரத்தில் மாலையில் சந்திக்க உள்ளார். 

பிரதமர் மோடியும், அதிபர் ஜி ஜின்பிங்கும் மாலையில் சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேச உள்ளனர். மாமல்லபுரத்தில் இருக்கும் பல்லவர்கள் கால சிற்பங்கள், குகைக் கோயில்கள், கட்டிடங்கள் ஆகியவற்றை இரு தலைவர்களும் பார்வையிடுகின்றனர்.

11-ம் தேதி இரவு சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு பிரதமர் மோடி இரவு விருந்து அளிக்கிறார். அதன்பின் கலாஷேத்ரா சார்பில் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரு தலைவர்களும் கலாஷேத்ரா சார்பில் நடத்தப்படும் பாரம்பரிய நடனம், கலை நிகழ்ச்சிகளைப் பார்வையிடுகின்றனர்.

அதன்பின் 12-ம் தேதி காலையில் பிரதமர் மோடியும், அதிபர் ஜி ஜின்பிங்கும் 2-ம் கட்டப் பேச்சில் ஈடுபடுகிறார்கள். இந்தப் பேச்சு தாஜ் குழுமத்தில் உள்ள பிஷர்மேன்ஸ் கோவ் ஓட்டலில் நடக்கிறது என செய்திகள் தெரிவிக்கின்றன.

அங்கு மதிய உணவை முடித்துக்கொண்டு 2 மணிக்கு அதிபர் ஜி ஜின்பிங் நேபாளம் புறப்படுகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சந்திப்பின்போது பிரதமர் மோடியுடன் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் இடம் பெறுவார்கள். அதேபோல, சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் இடம் பெறுவார்கள்.

Next Story