மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான தேச துரோக வழக்கை திரும்பப்பெற முடிவு


மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான தேச துரோக வழக்கை திரும்பப்பெற முடிவு
x
தினத்தந்தி 9 Oct 2019 4:16 PM GMT (Updated: 9 Oct 2019 4:16 PM GMT)

மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான தேச துரோக வழக்கை திரும்பப்பெற முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.

பாட்னா,

இந்தியாவில் நடக்கும் சிறுபான்மையினர் மீதான வன்முறை சம்பவங்களை கண்டித்தும், இந்த விவகாரங்களில் உடனடி தலையீடு வேண்டும் என்றும் கடந்த ஜூலை 23-ந்தேதி சினிமா இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி, நடிகர் அனுராக் காஷ்யாப், தயாரிப்பாளர் ஷியாம் பெனகல், அபர்ணா சென், பாடகர் சுபா முத்கல், வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குகா, வங்காள நடிகர் சவுமித்ரா சாட்டர்ஜி, சமூக சேவகர் பினாயக் சென், சமூக ஆர்வலர்கள் ஆஷிஷ் நந்தி உள்பட 49 பேர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினர்.

இக்கடிதம் நாட்டின் நற்பெயரை கெடுப்பதாகவும், பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதாகவும் கூறி பீகாரை சேர்ந்த வக்கீல் சுதிர் குமார் ஓஜா அங்குள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து, இயக்குனர் மணிரத்னம் உள்பட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோகம், பொதுமக்களுக்கு தொந்தரவு விளைவித்தல், மத உணர்வுகளை புண்படுத்துதல், அமைதியை குலைக்கும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் பீகார் போலீசார் கடந்த 4-ந்தேதி வழக்குப்பதிவு செய்தனர்.

பீகார் போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு தமிழ் திரையுலகினர், அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில்,  மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான தேச துரோக வழக்கை திரும்பப்பெற முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.  புகார் அளித்த நபர் தவறான தகவல்களை கொடுத்ததால் தான் வழக்கு பதியப்பட்டதாக பீகார் காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. புகார் அளித்த நபருக்கு எதிராக 182வது சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பீகார் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story