தேசிய செய்திகள்

பிரதமர் மோடியுடன், டாக்டர் ராமதாஸ் சந்திப்பு 7 தமிழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தினார் + "||" + With PM Modi, Meet Dr. Ramadoss

பிரதமர் மோடியுடன், டாக்டர் ராமதாஸ் சந்திப்பு 7 தமிழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தினார்

பிரதமர் மோடியுடன், டாக்டர் ராமதாஸ் சந்திப்பு 7 தமிழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தினார்
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை டாக்டர் ராமதாஸ் சந்தித்து, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 தமிழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தினார்.
புதுடெல்லி,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுவதற்காக டெல்லி சென்றார். அவருடன் கட்சியின் இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.யும் சென்றார். அவர்கள் பகல் 11.30 மணியளவில் பிரதமரை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு டெல்லியில் உள்ள பிரதமரின் இல்லத்தில் நடந்தது.


சுமார் 20 நிமிடம் நடந்த இந்த சந்திப்பின்போது, இந்திய-சீன உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக மாமல்லபுரத்தில் நடக்கும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுக்கு தனது பாராட்டுக்களை டாக்டர் ராமதாஸ் தெரிவித்துக்கொண்டார். இதற்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். மேலும், பிரதமரிடம் சில கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் டாக்டர் ராமதாஸ் வழங்கினார். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் உணர்வுகள் மற்றும் நீண்ட நாள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் நோக்கம் கொண்ட மனிதநேய கோரிக்கை மீது பிரதமராகிய தங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக, தமிழ்நாட்டு மக்களின் சார்பில் இந்தக் கடிதத்தை தங்கள் முன் வைக்கிறேன்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேருக்கு தொடக்கத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் பல்வேறு காலகட்டங்களில் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் 1991-ம் ஆண்டு முதல் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்த வழக்கில் பேரறிவாளனுக்கு எந்த தொடர்பும் இல்லை.

7 தமிழர்களை விடுதலை செய்ய சட்டப்படியோ, அரசியல் ரீதியாகவோ எந்த தடையும் இல்லை. அவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு. அதில் வேறு யாரும் தலையிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்திருக்கிறது.

இந்தியாவின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் பாபர்கல்சா பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் 8 பேரை விடுதலை செய்ய மத்திய அரசு ஒப்புக்கொண்டிருக்கிறது. தடா சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டுள்ள இவர்களின் தண்டனையை, சீக்கிய குருமார்களில் ஒருவரான குருநானக்கின் 550-ஆவது பிறந்தநாளையொட்டி மத்திய அரசு குறைத்துள்ளது. இதே கருணையை 7 தமிழர்களிடமும் காட்டுவதற்கு எந்தத் தடையும் இருக்காது என்று நம்புகிறேன்.

எனவே, தமிழக அமைச்சரவைத் தீர்மானத்தில் பரிந்துரைத்துள்ளவாறு 7 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். இக்கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் அதற்காக ஒட்டுமொத்த தமிழ் சமுதாயமும் தங்களுக்கு என்றென்றும் நன்றிக்கடன்பட்டிருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கோதாவரி-காவிரி இணைப்பு குறித்த அறிவிப்பு கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் இடம் பெறும் என்று தமிழக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால், அத்தகைய அறிவிப்பு வெளியாகாதது தமிழக மக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமராகிய தாங்கள் அடுத்தடுத்து தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் நிலையில், ஏதேனும் ஒரு பயணத்தின் போது இது குறித்த அறிவிப்பை சிறப்பு அறிவிப்பாக வெளியிட வேண்டும். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள 2020-2021-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் இத்திட்டத்திற்கான நிதியையும் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

காவிரி பாசன மாவட்டங்களில் அறிவிக்கப்பட்ட அனைத்து ஹைட்ரோ கார்பன் திட்டங்களையும் கைவிட வேண்டும். காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து அறிவிக்க வேண்டும்.

தமிழ் மொழி, தமிழ் கலாசாரம், தமிழ் இலக்கியம் ஆகியவற்றின் மீது தாங்கள் கொண்டுள்ள பற்றையும், அக்கறையையும் நான் அறிவேன். அவற்றைப் போலவே தமிழ் நிலத்தின் பயன்பாடும், தமிழ் விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

ஆகவே, தமிழகத்தின் நலன் கருதி மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும்படி பிரதமராகிய தங்களை தமிழ்நாட்டு மக்களின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

பிரதமரை சந்தித்துவிட்டு டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இருவரும் நேற்று இரவு சென்னை திரும்பி வந்தனர். சென்னை விமான நிலையத்தில் டாக்டர் ராமதாஸ், நிருபர்களிடம் கூறும்போது, “டெல்லியில் பிரதமரை சந்தித்து பேசினேன். அப்போது சீன அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழகத்தையும், மாமல்லபுரத்தையும் தேர்ந்து எடுத்ததற்கு நன்றி தெரிவித்தேன். இதை தமிழக மக்கள் வரவேற்பதாகவும் தெரிவித்தேன்”என்றார்.

பின்னர் அன்புமணி ராமதாஸ் கூறும்போது, “பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து தமிழக பிரச்சினைகள் பற்றி பேசினோம். சீன அதிபர்-பிரதமர் மாமல்லபுரத்தில் சந்திப்பது தமிழகத்துக்கு பெருமை. இந்த இடத்தை தேர்வு செய்ததற்காக தமிழக மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்தோம். சீன அதிபர்-பிரதமர் சந்திப்பு வரலாற்றில் இடம் பெற உள்ளது. பொருளாதாரம், கலாசாரம், எல்லை பிரச்சினை போன்றவைகள் இந்த பேச்சுவார்த்தை மூலம் சுமூகமாக தீர்க்கின்ற சந்தர்ப்பம் கிடைக்கும். மத்திய-மாநில அரசுகள் இணைந்து கீழடியில் கூடுதலாக ஆராய்ச்சிகளை செய்து பொருட்களை பத்திரப்படுத்தி விரிவான ஆராய்ச்சிகளை செய்து உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும்”என்றார்.