அவதூறு வழக்கில் சூரத் கோர்ட்டில் ராகுல் காந்தி ஆஜர் “நான் குற்றவாளி அல்ல” என்று கூறினார்


அவதூறு வழக்கில் சூரத் கோர்ட்டில் ராகுல் காந்தி ஆஜர் “நான் குற்றவாளி அல்ல” என்று கூறினார்
x
தினத்தந்தி 10 Oct 2019 11:00 PM GMT (Updated: 10 Oct 2019 8:52 PM GMT)

சூரத் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜரான ராகுல் காந்தி, அவதூறு வழக்கில் நான் குற்றவாளி அல்ல என்று கூறினார்.

சூரத்,

கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது கர்நாடக மாநிலம் கோலாரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், “நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி... எப்படி அவர்கள் அனைவரும் மோடி என்ற துணை பெயரை வைத்திருக்கிறார்கள். எப்படி அனைத்து திருடர்களும் மோடி என்ற பொதுவான துணை பெயரை வைத்திருக்கிறார்கள்?” என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த பா.ஜனதா எம்.எல்.ஏ. பர்னேஷ் மோடி அங்குள்ள தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். அதில், இந்த கருத்தை தெரிவித்திருப்பதன் மூலம் ராகுல் காந்தி ஒட்டுமொத்த மோடி சமுதாயத்தினருக்கும் அவமதிப்பை ஏற்படுத்திவிட்டார் என்று கூறியிருந்தார்.

சில நாட்களாக வெளிநாட்டில் தங்கியிருந்த ராகுல் காந்தி நேற்று சூரத் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜரானார். அப்போது மாஜிஸ்திரேட்டு கபாடியா, “உங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றத்தை ஒப்புக்கொள்கிறீர்களா?” என்று ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு ராகுல் காந்தி, நான் இந்த வழக்கில் குற்றமற்றவன் என்று பதில் அளித்தார்.

ராகுல் காந்தியின் வக்கீல்கள், ராகுல் காந்தி கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என்று மாஜிஸ்திரேட்டிடம் மனு கொடுத்தனர். இதற்கு பர்னேஷ் மோடி தரப்பு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார்.

விலக்கு கோரும் மனு மீது வருகிற டிசம்பர் 10-ந் தேதி முடிவு எடுக்கப்படும். அன்றைய தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது. அன்றைய தினம் ராகுல் காந்தி நேரில் ஆஜராக தேவை இல்லை என்று மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

இதுபற்றி ராகுல் காந்தி டுவிட்டரில், “என்னை பேசவிடாமல் தடுப்பதற்காக என்னுடைய அரசியல் எதிரிகளால் தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கில் ஆஜராவதற்காக சூரத் வந்துள்ளேன். எனக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக இங்கு திரண்டுவந்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

ஆமதாபாத் கோர்ட்டில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதா தொண்டர்களால் தாக்கல் செய்யப்பட்ட இதேபோன்ற வழக்கு ஒன்றில் ராகுல் காந்தி இன்று (வெள்ளிக்கிழமை) ஆஜராக இருக்கிறார்.

அரியானா, மராட்டியம் ஆகிய மாநிலங்களில் வருகிற 21-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ராகுல் காந்தி வெளிநாடு சென்றதை பா.ஜனதா கட்சியினர் விமர்சித்து வருகிறார்கள்.

ராகுல் காந்தி எந்த நாட்டுக்கு சென்றார் என்பதை வெளியிடாத காங்கிரஸ், “ஒருவரின் பொது வாழ்விற்கும், தனிப்பட்ட வாழ்க்கைக்கும் வித்தியாசம் இருக்கிறது. அரசியலில் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை மதிக்க வேண்டும்” என்று பதில் அளித்துள்ளது.

ராகுல் காந்தி மராட்டிய மாநிலத்தில் வருகிற 13, 15-ந் தேதிகளும், அரியானாவில் 14-ந் தேதியும் பிரசாரம் செய்ய உள்ளார்.

Next Story