மராட்டிய சட்டசபை தேர்தல்: நரேந்திர மோடி - ராகுல்காந்தி இன்று போட்டி பிரசாரம்
மராட்டிய சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி - ராகுல்காந்தி ஆகியோர் இன்று ஒரே நாளில் போட்டி பிரசாரம் மேற்கொள்கிறார்கள்.
மும்பை,
288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கும், 90 உறுப்பினர்களை கொண்ட அரியானா சட்டசபைக்கும் வருகிற 21-ந்தேதி தேர்தல் நடக்கிறது. 24-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடை பெறுகிறது.
மராட்டிய மாநிலத்தில் பிரதமர் நரேந்திரமோடியும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியும் இன்று ஒரே நாளில் பிரசாரம் செய்கிறார்கள்.
பா.ஜனதா-சிவசேனா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மோடி இன்று 2 இடங்களில் பிரசாரம் செய்கிறார். ஜலாகான் மற்றும் சகோலியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார்.
காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி மராட்டியத்தில் இன்று 3 இடங்களில் ஆதரவு திரட்டுகிறார்.
லத்தூர் மற்றும் மும்பையில் உள்ள தாராவி, சண்டிவிலி ஆகிய இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார். பாராளுமன்ற தேர்தல் தோல்விக்குப் பிறகு ராகுல்காந்தி பங்கேற்கும் முதல் தேர்தல் பிரசார கூட்டம் இதுவாகும்.
மராட்டிய மாநிலத்தில் பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜனதா-சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டணி ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் ஆர்வத்தில் உள்ளது. பா.ஜனதா 150 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சியைச் சேர்ந்த 14 வேட்பாளர்கள் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். சிவசேனா 124 தொகுதிகளில் களத்தில் நிற்கிறது.
காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மராட்டியத்தில் ஆட்சியை மீண்டும் பிடிக்கும் வேட்கையில் உள்ளது. இரு கட்சிகளும் தலா 125 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. மீதி உள்ள 38 இடங்கள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அரியானா மாநிலத்தில் ராகுல்காந்தி நாளை பிரசாரம் செய்து கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
Related Tags :
Next Story