டெல்லியில் படையெடுத்து வரும் கொசுக்களால் 467 பேருக்கு டெங்கு பாதிப்பு


டெல்லியில் படையெடுத்து வரும் கொசுக்களால் 467 பேருக்கு டெங்கு பாதிப்பு
x
தினத்தந்தி 14 Oct 2019 3:11 PM IST (Updated: 14 Oct 2019 3:11 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் டெங்கு காய்ச்சலால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை இந்த வருடத்தில் 467 ஆக உயர்ந்து உள்ளது.

புதுடெல்லி,

இந்திய தலைநகர் டெல்லியில் கொசுக்களால் பரவும் தொற்று நோய்களின் பாதிப்பு அதிகரித்து வருகிறது.  இந்த வருடத்தில் கொசுக்களால் பரவ கூடிய வியாதிகளான டெங்கு மற்றும் மலேரியா காய்ச்சல் பாதிப்பு பற்றி நகராட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.

அந்த அறிக்கையில், டெல்லியில் இந்த வருடத்தில் 467 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.  இதேபோன்று கடந்த அக்டோபர் 12ந்தேதி வரை 459 பேருக்கு மலேரியா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இவற்றில் டெங்குவுக்கு கடந்த அக்டோபரில் 185 பேரும், செப்டம்பரில் 190 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  இதேபோன்று கடந்த ஆகஸ்டில் 52 பேருக்கும், ஜூலையில் 18 பேருக்கும் மற்றும் ஜூனில் 11 பேருக்கும் டெங்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.  மீதமுள்ளோர் ஜனவரி முதல் மே வரையிலான காலக்கட்டத்தில் பாதிக்கப்பட்டு உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த வருடத்தில் அக்டோபர் 5ந்தேதி வரை 356 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு இருந்தது.  ஆனால், கடந்த ஒரு வாரத்தில் கூடுதலாக 111 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.  இதனால் மொத்த எண்ணிக்கை 467 ஆக உயர்ந்து உள்ளது.

கொசுக்களால் பரப்பப்படும் மற்றொரு நோயான மலேரியாவுக்கு இந்த மாதம் 12ந்தேதி வரை 91 பேருக்கும், கடந்த செப்டம்பரில் 214 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இதேபோன்று கடந்த ஆகஸ்டில் 56 பேருக்கும், ஜூலையில் 54 பேருக்கும், ஜூனில் 35 பேருக்கும், மே மாதத்தில் 8 பேருக்கும் மற்றும் ஏப்ரலில் ஒருவருக்கும் இந்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்த வருடத்தில் 118 பேருக்கு சிக்குன்குனியா பாதிப்பும் ஏற்பட்டு உள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  டெல்லியில் கொசுக்களால் பரவும் டெங்கு, மலேரியா மற்றும் சிக்குன்குனியா ஆகிய நோய் பாதிப்புகளால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்து உள்ளனர்.

Next Story