ஆன்லைனில் தகவல் அறியும் உரிமைக்கான வசதி - மத்திய, மாநில அரசுகளுக்கு மேலும் 4 வாரம் அவகாசம்


ஆன்லைனில் தகவல் அறியும் உரிமைக்கான வசதி - மத்திய, மாநில அரசுகளுக்கு மேலும் 4 வாரம் அவகாசம்
x
தினத்தந்தி 15 Oct 2019 3:15 AM IST (Updated: 15 Oct 2019 2:59 AM IST)
t-max-icont-min-icon

ஆன்லைனில் தகவல் அறியும் உரிமைக்கான வசதி செய்து தருவது குறித்து பதில் அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு மேலும் 4 வாரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டில் டெல்லியை சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனம் கடந்த ஆகஸ்டு மாதம் ஒரு மனு தாக்கல் செய்தது. அதில், தகவல் அறியும் உரிமை சட்டம் ஒரு வலுவான ஆயுதம். இதனை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து தகவலை பெறுவதற்கு வசதியாக ஒரு இணைய பக்கத்தை (போர்டல்) உருவாக்க வேண்டும். இதன்மூலம் வெளிநாடு வாழ் இந்தியர்களும் எளிதாக தகவலை அறிய முடியும் என்று கூறியிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.வி.ரமணா, சஞ்ஜீவ்கன்னா, கிருஷ்ண முராரி ஆகியோர் கொண்ட அமர்வு மத்திய அரசும், 25 மாநில அரசுகளும் (டெல்லி, மராட்டியம் தவிர) இந்த மனுவுக்கு உரிய பதில் அளிக்க உத்தரவிட்டது.

இந்த வழக்கு நேற்று அதே அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இதுவரை பதில் அளிக்காத மத்திய, மாநில அரசுகள் மீது அதிருப்தி தெரிவித்தனர். உரிய பதில் அளிக்க மேலும் 4 வாரங்கள் மட்டும் அவகாசம் வழங்கப்படுவதாகவும், அதற்கு பின்னர் அவகாசம் வழங்கப்படாது என்றும் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Next Story