ராதாபுரம் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கை முடிவு தொடர்பான வழக்கு - தி.மு.க. கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு ஏற்க மறுத்தது


ராதாபுரம் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கை முடிவு தொடர்பான வழக்கு - தி.மு.க. கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு ஏற்க மறுத்தது
x
தினத்தந்தி 15 Oct 2019 4:15 AM IST (Updated: 15 Oct 2019 3:24 AM IST)
t-max-icont-min-icon

ராதாபுரம் தொகுதியின் மறு வாக்கு எண்ணிக்கை முடிவு தொடர்பான வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்ற தி.மு.க.வின் கோரிக்கையை ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.

புதுடெல்லி,

2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட இன்பதுரை தி.மு.க. வேட்பாளர் அப்பாவுவை விட 49 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து அப்பாவு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வாக்கு எண்ணிக்கையின்போது 203 தபால் வாக்குகளை எண்ணவில்லை என்றும், கடைசி 3 சுற்று வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளது என்றும் வழக்கில் அவர் கூறி இருந்தார்.

இதைத்தொடர்ந்து தபால் வாக்குகள் மற்றும் கடைசி 3 சுற்று வாக்குகளை மீண்டும் எண்ண ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி கடந்த 4-ந்தேதி சென்னை ஐகோர்ட்டில் மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இதற்கிடையே, ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து அ.தி.மு.க எம்.எல்.ஏ. இன்பதுரை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். 203 தபால் ஓட்டுகளில் அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரி கையொப்பம் இடாததால்தான் அந்த வாக்குகள் நிராகரிக்கப்பட்டதாக இன்பதுரை தரப்பில் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மறு வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர். அதேசமயம், தபால் வாக்குகள் பற்றி விரிவாக ஆய்வு செய்யவேண்டி இருப்பதால் வருகிற 23-ந்தேதி வரை வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டனர். இதனால் மறு வாக்கு எண்ணிக்கை முடிவு அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில், மறுவாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிக்க இடைக்கால தடை விதித்த வழக்கை 23-ந்தேதியோ அல்லது அதற்கு முன்பாகவோ விரைந்து விசாரிக்க வேண்டும் என்று அப்பாவு தரப்பில் நேற்று நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வில் மூத்த வக்கீல்கள் அபிஷேக் மனு சிங்வி, பி.வில்சன் ஆகியோர் ஆஜராகி முறையிட்டனர்.

அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், “வருகிற 23-ந்தேதியன்று வழக்கு பட்டியல் இடப்பட்டுள்ள நிலையில் அவசரம் ஏன்?” என்று கேள்வி எழுப்பினர்.

உடனே அபிஷேக் மனு சிங்வி, அந்த பட்டியலில் இருந்து வழக்கை நீக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று கூறினார். அதற்கு நீதிபதிகள், “வழக்கை பட்டியலிடுவது எங்கள் வேலையல்ல, அது பதிவுத்துறையின் வேலை” என்று கூறி அவரது கோரிக்கையை ஏற்க மறுத்தனர்.

சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தில் பின்னர் அப்பாவு இதுபற்றி நிருபர்களிடம் பேசுகையில், “இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி அரசியல் சாசன அமர்வுக்கு செல்வதால் 23-ந்தேதி வழக்கு விசாரிக்கப்படுமா? என்று சந்தேகம் ஏற்பட்டது. அதனால் நாங்கள் நீதிபதியிடம் முறையிட்டோம். அதற்கு நீதிபதி, ‘பதிவாளர் பட்டியலில் கொண்டு வந்தால் நிச்சயம் விசாரிப்போம்’ என்றார். அதன் அடிப்படையில் எங்களுக்கு நல்ல முடிவு கிடைக்கும் என நம்புகிறேன்” என்று கூறினார்.


Next Story