இறந்த பெண் குழந்தையை புதைக்க சென்ற இடத்தில் உயிருக்கு போராடிய மற்றொரு பெண் குழந்தை!
உத்தரபிரதேசத்தில் இறந்த பெண் குழந்தையை புதைக்க சென்ற இடத்தில் உயிருக்கு போராடிய மற்றொரு பெண் குழந்தையை மீட்ட சம்பவம் நடந்துள்ளது.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் பரேலியைச் சேர்ந்தவர் ஹிதேஷ் குமார் சிரோஹி. இவரது மனைவி வைஷாலி, பரேலியில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் 7 மாத கர்ப்பமாக இருந்த வைஷாலிக்கு பரேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த வியாழக்கிழமை பெண் குழந்தை குறைபிரசவத்தில் பிறந்தது. ஆனால் பிறந்த சில நிமிடங்களிலேயே அந்தக் குழந்தை இறந்துவிட்டது.
இறந்த பெண் குழந்தைக்கு ஈமச்சடங்குகள் செய்யப்பட்டு குழந்தையை புதைப்பதற்காக ஹிதேஷ் குமார் சிரோஹி மயானத்திற்கு எடுத்து சென்றார். இந்தநிலையில் மயானத்தில் 3 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டிய போது திடீரென மண்ணில் ஒரு பெரிய அளவில் பானை கிடைத்தது. அந்தப் பானையை திறந்து பார்த்தபோது அதில் உயிருடன் ஒரு பெண் குழந்தை மூச்சு விடப் போராடிக் கொண்டிருந்தது. இதனை பார்த்த அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அந்தக் குழந்தையை அருகிலுள்ள மருத்துவமனையில் ஹிதேஷ் குமார் சிரோஹி சேர்த்தார்.
இதுகுறித்து பரேலி போலீஸ் சூப்பிரண்டு அபிநந்தன்சிங் கூறும்போது, “அந்த பெண் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்தப் பெண் குழந்தையின் சிகிச்சைக்கு தேவையான உதவிகளைச் செய்வதாக பிதாரி சைன்பூர் எம்எல்ஏ ராஜேஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார். குழந்தையை உயிருடன் மண்ணில் புதைத்தது யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story