இஸ்லாமியர்கள் எந்த மசூதியிலும் ‘நமாஸ்’ செய்யலாம், இந்துக்களால் ராமர் பிறந்த இடத்தை மாற்ற முடியாது -அயோத்தி வழக்கில் வாதம்


இஸ்லாமியர்கள் எந்த மசூதியிலும் ‘நமாஸ்’ செய்யலாம், இந்துக்களால் ராமர் பிறந்த இடத்தை மாற்ற முடியாது -அயோத்தி வழக்கில் வாதம்
x
தினத்தந்தி 15 Oct 2019 11:05 AM GMT (Updated: 15 Oct 2019 11:05 AM GMT)

இஸ்லாமியர்களால் அனைத்து மசூதிகளிலும் நமாஸ் செய்ய முடியும் ஆனால் இந்துக்களால் ராமரின் பிறந்த இடத்தை மாற்ற முடியாது என்று அயோத்தி வழக்கு வாதத்தின்போது வக்கீல் பராசரன் தெரிவித்தார்.

புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி மற்றும் ராமஜென்ம பூமி அமைந்திருந்த இடம் என கூறப்படுகிற சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம்? என்பது தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான  அரசியல்சாசன அமர்வு தினசரி விசாரணை அடிப்படையில் விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு தொடர்பான இன்றைய விசாரணையின் போது ராம் லல்லா என்ற இந்து அமைப்பின் சார்பாக வக்கீல் பராசரன் வாதம் செய்தபோது,  “அயோத்தியாவில் மட்டும் சுமார் 50 முதல் 60 மசூதிகள் உள்ளன. அவற்றில் எந்த மசூதியில் வேண்டுமானாலும் இஸ்லாமியர்களால் நமாஸ் செய்து கொள்ள முடியும். ஆனால் இந்துக்களால் ராமரின் பிறந்த இடமாக நம்பப்பட்டு  ஏற்றுக்கொள்ளப்பட்ட இடத்தை மாற்ற முடியாது” என்றார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த இஸ்லாமியர் தரப்பு வக்கீல் ராஜீவ் தவான்,  அயோத்தியாவில் மொத்தம் எத்தனை கோவில்கள் உள்ளன என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த வக்கீல் பராசரன், ராமர் பிறந்த இடத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காகவே தனது வாதத்தை முன்வைத்ததாக தெரிவித்தார்.

முன்னதாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அயோத்தி வழக்கு விசாரணையின் 40-வது நாளான அக்டோபர் 16 ஆம் தேதி, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்பதற்கான கடைசி நாள் என்று தெரிவித்தார். 

அக்டோபர் 17 ஆம் தேதி இறுதி விசாரணை நடைபெறும். இந்த வழக்கிற்கான தீர்ப்பு வரும் நவம்பர் 4 அல்லது 5 ஆம் தேதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story