மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி முன்னிலையில் துர்கா பூஜை விழாவில் அவமானப்படுத்தப்பட்டதாக கவர்னர் குற்றச்சாட்டு


மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி முன்னிலையில் துர்கா பூஜை விழாவில் அவமானப்படுத்தப்பட்டதாக கவர்னர் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 15 Oct 2019 11:16 AM GMT (Updated: 15 Oct 2019 11:16 AM GMT)

முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்திருந்த துர்கா பூஜை விழாவில் தான் அவமானப்படுத்தப்பட்டதாக மேற்கு வங்காள கவர்னர் ஜக்தீப் தான்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

கொல்கத்தா

மேற்கு வங்க மாநில துர்கா பூஜை விழாக்கள் வெகுவிமரிசையாக நடைபெறுவது வாடிக்கை. கடந்த வெள்ளியன்று முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் துர்கா பூஜை விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.  இதில் கவர்னர்  உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

முன்வரிசையில் முதல்வர் மம்தா அமர்ந்திருந்த நிலையில் கவர்னர் ஜக்தீப் தான்கர் 4 வரிசை தள்ளி அமர வைக்கப்பட்டதாகவும், துர்கா பூஜை விழாவில் தனக்கு அவமரியாதை ஏற்பட்டதாகவும் கூறி அதிரவைத்துள்ளார்.

இதன் காரணமாக தான் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள கவர்னர்  ஜக்தீப் தான்கர், இந்த அவமரியாதை எனக்கானது அல்ல, மேற்குவங்க மக்களுக்கானது என்றும் கூறியுள்ளார்.

முதல்வர் மமதா பானர்ஜி ஏற்பாடு செய்திருந்த துர்கா பூஜை விழாவில் தான் அவமானப்படுத்தப்பட்டதாக மேற்குவங்க ஆளுநர் ஜக்தீப் தான்கர் குற்றம்சாட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

4 மணிநேரங்களாக பின் வரிசையில் அமர்ந்து ஒரு நிகழ்ச்சியைக் கூட சரியாக பார்க்க முடியவில்லை, அடிக்கடி யாராவது வந்து குறுக்கே நின்று கொண்டிருந்தனர். இது யதேச்சையாக நடந்ததாக தான் கருதவில்லை என்றும் ஆளுநர் ஜக்தீப் தான்கர் தெரிவித்துள்ளார். 

மேலும் அந்த பந்தலில் 4 மணிநேரம் இருந்தாலும் கூட மாநிலத்தின் முதல் குடிமகனான என்னை ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பிலும் ஒரு நொடி கூட என் முகம் காட்டப்படவில்லை என்றார்.

இது போன்ற அவமானத்தினால் எனக்கு தூக்கமில்லா இரவுகளாக தற்போது நகர்ந்து கொண்டிருப்பதாகவும், ஒரு சில அமைச்சர்களும், எம்.பிக்களும் தனிப்பட்ட முறையில் தன்னை தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்ததாகவும் ஆளுநர் கூறியது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Next Story