சாவர்க்கரை தொடர்ந்து கோட்சேவுக்கும் பாரத ரத்னா விருது வழங்க பா.ஜ.க. முன்மொழியும்; இ.கம்யூனிஸ்டு குற்றச்சாட்டு
சாவர்க்கரை தொடர்ந்து கோட்சேவுக்கும் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பா.ஜ.க. முன்மொழியும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி குற்றச்சாட்டு கூறியுள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் வருகிற அக்டோபர் 21-ந் தேதி 288 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி 16 இடங்களில் போட்டியிடுகிறது.
மராட்டிய சட்டமன்ற தேர்தலுக்காக பா.ஜ.க. இன்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், வீர சாவர்க்கர் என்ற பிரபல பெயரால் அறியப்படும் விநாயக தாமோதர் சாவர்க்கருக்கு நாட்டின் உயரிய பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று மத்தியில் ஆட்சி செய்யும் தேசிய ஜனநாயக கூட்டணியிடம் நாங்கள் கேட்போம் என தெரிவித்து உள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொது செயலாளர் ராஜா செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, காந்திஜியின் நூற்றாண்டு விழாவை நாமனைவரும் கொண்டாடி வரும் வேளையில், அவரது படுகொலை வழக்கில் ஒரு குற்றவாளியான சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பா.ஜ.க. கோருவது என்பது மிக பெரிய முரண்பட்ட விசயம்.
காந்திஜியின் கொலையாளியான நாதுராம் கோட்சேவுக்கும் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பா.ஜ.க. கோரிக்கை வைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. இது அவர்களின் நிகழ்ச்சி நிரலாக உள்ளது என கூறியுள்ளார்.
இந்த தேர்தலில் எங்களுடைய முதன்மை இலக்கானது, பா.ஜ.க. மற்றும் அவர்களின் கூட்டணி கட்சிகளை தோற்கடிப்பதே ஆகும். வேறு தொகுதிகளில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மற்றும் பிற எதிர்க்கட்சிகளுக்கு நாங்கள் ஆதரவு வழங்குவோம். பா.ஜ.க.வுக்கு எதிராக வாக்களிக்கும்படியும் மக்களிடம் நாங்கள் கேட்டு கொள்வோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story